search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி தவறி விழுந்த கிணற்றை சுற்றி பொதுமக்கள் திரண்டிருந்ததையும், சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டதையும் படம்
    X
    சிறுமி தவறி விழுந்த கிணற்றை சுற்றி பொதுமக்கள் திரண்டிருந்ததையும், சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டதையும் படம்

    பொன்னமராவதி அருகே ஆடு மேய்த்த சிறுமி கிணற்றில் தவறி விழுந்து பலி

    பொன்னமராவதி அருகே ஆடு மேய்த்த சிறுமி கிணற்றில் தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கொப்பனாப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் கிராம உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் காயத்ரி (வயது 11). இவள் செவ்வூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு வடித்து வந்தாள். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    இதனால் வீட்டில் இருந்த காயத்ரி, நேற்று தனது பாட்டியுடன் சென்று அருகில் உள்ள ஊரணி பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தாள். அப்போது தாகம் எடுத்ததால் காயத்ரி, அவளது தோழியுடன் அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து குடிக்க சென்றாள். படிகளில் இறங்குவதற்காக கிணற்று தடுப்புச்சுவரில் ஏறியபோது நிலை தடுமாறி கிணற்றுக்குள் காயத்ரி விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். இதனால் அவளுடைய தோழி கூச்சலிட்டாள். இதையடுத்து அங்கு அப்பகுதியினர் திரண்டனர். மேலும் இது பற்றி பொன்னமராவதி தீயணைப்புத்துறை, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் அங்கு வந்த நிலைய அலுவலர் (பொறுப்பு) யோகநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 10 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி தேடி தண்ணீருக்குள் இருந்து சிறுமியை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மேரி, காயத்ரிக்கு முதலுதவி அளித்தார். பின்னர் கொப்பனாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட காயத்ரிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி அவள் பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×