என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்ததுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    X
    மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்ததுடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் தடையை மீறி மீன்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

    வேலூர் புதிய மீன்மார்க்கெட்டில் தடையை மீறி மீன்கள் விற்ற 2 கடைகள் உள்பட அரசின் விதிமுறையை பின்பற்றாத கடைகளுக்கு மாநகராட்சி கமிஷனர் சங்கரன் அபராதம் விதித்தார்.
    வேலூர்:

    வேலூரில் புதிய மீன் மார்க்கெட்டில் அரசின் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நேற்று காலை மாநகராட்சி கமிஷனர் சங்கரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடையை மீறி 2 கடைகளில் சில்லரை விற்பனையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து கமிஷனர் அந்த 2 கடைகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து, அந்தக் கடைகளை உடனடியாக மூடும்படி கூறினார்.

    அதைத்தொடர்ந்து அவர் மார்க்கெட் முன்பகுதியில் தள்ளுவண்டி மற்றும் தரையில் வைத்து மீன்கள் விற்பனை செய்த வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி மாநகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்தார். அதன்படி மாநகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து மீன் வியாபாரிகளை அப்புறப்படுத்தினர்.

    மேலும் மாங்காய் மண்டி அருகே உள்ள இறைச்சிக்கடைகளில் கமிஷனர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு முகக் கவசம் அணியாமல் இறைச்சி வாங்க வந்தவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. 4-வது மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் கமிஷனர் மேற்கொண்ட ஆய்வில் அரசின் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து மொத்தம் ரூ.11 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது.

    ஆய்வின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்ரசேனா, சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அதேபோல் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் நடத்திய ஆய்வில், ஊரடங்கு உத்தரவு தடையை மீறி திறந்திருந்த 2 ஓட்டல்கள் உள்பட 13 கடைகளுக்கு அபராதம் விதித்து மொத்தம் ரூ.8 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. 3-வது மண்டலத்தில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்த ஆய்வில், இறைச்சிக்கடைகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத, முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்து மொத்தம் ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்பட்டது
    Next Story
    ×