என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

    பண்ருட்டி அருகே சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    கடலூர்:

    பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று பண்ருட்டி அருகே எல்.ஆர்.பாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி (வயது 56) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான குப்புசாமி மீது பண்ருட்டி போலீஸ் நிலையம் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 9 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு,குப்புசாமியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து சாராய வியாபாரியான குப்புசாமியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மத்திய சிறையில் உள்ள குப்புசாமியிடம், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×