என் மலர்
செய்திகள்

திருவிடைமருதூரில் மருந்துக்கடை-வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை
கும்பகோணம்:
கும்பகோணம் செட்டிமண்டபம் அன்னை அஞ்சுகம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 50). இவர் ஐந்து தலைப்பு வாய்க்கால் மெயின்ரோடு பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப் பெட்டியில் இருந்த 3 நாள் விற்பனை பணம் ரூ.45 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.
இதேபோல் திருவிடைமருதூர் அண்ணாசிலை மேல வீதி பகுதியில் வசித்து வரும் செந்தில்வேல் (49). இவர் திருபுவனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பணம், நகை எதுவும் கிடைக்காததால் திரும்பி சென்றுவிட்டனர்.
கரிகுளம் எஸ்.எஸ்.நகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட்ராமன் (வயது 55). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவரும் மயிலாடுதுறைக்கு சென்றுள்ளனர்.அதனையறிந்த கொள்ளையர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த 3 கொள்ளை சம்பவங்கள் குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






