search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை கவுனி பாலத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்
    X
    யானை கவுனி பாலத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்

    யானை கவுனி பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது

    யானை கவுனி பாலத்தை துளையிட்டு இடிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் முழுமையாக இடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
    ராயபுரம்:

    சென்னை, வால்டாக்ஸ் சாலை மற்றும் ராஜா முத்தையா சாலைகளை இணைக்கும் வகையில் யானைக்கவுனி பாலம் உள்ளது. இது ரெயில்வே துறைக்கு சொந்தமானது.

    இந்த பாலத்தின் இரண்டு புறமும் உள்ள சர்வீஸ் சாலைப் பகுதியை மட்டுமே, மாநகராட்சி பராமரித்து வந்தது.

    இந்நிலையில், பழமை வாய்ந்த யானைக்கவுனி பாலம் மிகவும் பழுதடைந்ததால், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்வதற்கு, ரெயில்வே துறை மற்றும் போக்குவரத்து துறை தடை விதித்தது. இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.

    மூலக்கொத்தளம் பாலத்தில் இருந்து, வியாசர்பாடி, மணலி, மாதவரம், ரெட்ஹில்ஸ், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் யானைகவுனி பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று 2018, பிப்ரவரியில் தமிழக அரசு அறிவித்தது.

    இதற்கிடையே ரெயில்வே துறை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, 50:50 நிதி பங்களிப்புடன், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் அமைய உள்ளது.

    புதிதாக 100 மீட்டர் நீட்டிக்கப்படவுள்ள பகுதியில் பாலம் அமைக்கும் பணி முற்றிலும் ரெயில்வே துறை நிதி மூலமும் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலத்தின் கீழ் தண்டவாள பாதைகளை கூடுதலாக, 47 மீட்டரிலிருந்து 150 மீட்டருக்கு நீட்டிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் யானைக்கவுனி பழைய பாலத்தை இடிக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. பாலத்தின் ரெயில்வே பகுதியின் பின்புறம் உள்ள கட்டடங்கள் இடிக்கும் பணி ஏற்கனவே முடிவடைந்துள்ளது.

    பாலத்தை இடிக்கும் பணியில், 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கிரேன் இயந்திரங்கள், கட்டிங் இயந்திரங்கள் பயன்படுத்தி, பாலத்தை துளையிட்டு இடிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் முழுமையாக இடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இது பற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ஊரடங்கை பயன்படுத்தி இந்த பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. வழக்கமான நாட்களில் இடித்தால் ரெயில்கள் இயக்கம் பல நாட்கள் தடைபட்டிருக்கும் என்றார்.

    சென்டிரலில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு சரக்கு ரெயில்கள் இந்த பணி முடியும் வரை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்று ரெயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×