search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே எருக்கூர் நவீன அரிசி ஆலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.
    X
    சீர்காழி அருகே எருக்கூர் நவீன அரிசி ஆலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.

    வருவாய் இல்லாமல் தவிக்கும் லாரி டிரைவர்கள்

    ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள லாரி டிரைவர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள், தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் தமிழக அரசு சார்பில் நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சீர்காழி தாலுகா பகுதிக்கு உட்பட்ட கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், புத்தூர், மாதானம், தென்பாதி ஆகிய பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் நெல், அரிசி, உளுந்து ஆகியவற்றை நவீன அரிசி ஆலையில் ஏற்றி, இறக்கி வந்தனர்.

    மேலும் எடமணல் கிராமத்தில் அரசு உணவு சேமிப்பு கிடங்கு இருப்பதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் பயன் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 29 நாட்களாக மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது.

    இந்த ஊரடங்கால் பல்வேறு துறைகள் வருவாய் இழந்து முடங்கி உள்ளன. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.

    இதேபோல் சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், ஊரடங்கு அமலில் இருப்பதால் லாரிகளை இயக்க முடியாமல் கடந்த ஒரு மாதமாக வருவாயின்றி தவித்து வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக லாரி டிரைவர்கள், வாழ்வாதாரத்தை இழந்து குடும்பம் நடத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். லாரிகள் இயக்கப்படாததால் அரிசி ஆலை பகுதியில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலு கூறியதாவது:-

    சாதாரண நாட்களிலேயே போதிய வேலை வாய்ப்பு இல்லாமல் லாரி உரிமையாளர்களும், டிரைவர்களும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக லாரிகளை இயக்க முடியாமல் மேலும் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் லாரி டிரைவர்கள் அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் குடும்பம் நடத்தி வந்தனர்.

    ஆனால் தற்போது ஊரடங்கால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் லாரி டிரைவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். எனவே, சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள லாரி டிரைவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×