என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ராமநாதபுரம் அருகே லாரியை மடக்கி 1000 மதுபாட்டில்கள் கடத்தல் - 6 பேர் கைது

    லாரியை மடக்கி 1000 மதுபாட்டில்களை கடத்தியது தொடர்பாக டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் ஊரடங்கினால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பதற்காக ஆங்காங்கே கடைகளை உடைத்து மதுபாட்டில்களை திருடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு அரசு மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களை எடுத்துச் சென்று டாஸ்மாக் குடோன் அல்லது பாதுகாப்பான இடங்களில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகளில் உள்ள மதுபாட்டில்களை லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் ஏற்றி ராமநாதபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் ஏற்றி வரப்பட்டு, மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் டி-பிளாக் அருகில் அம்மா பூங்கா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வினோத் என்பவர் ஓட்டி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

    அதில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான 498 மதுபாட்டில்கள் 10 பெட்டிகளில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த போது, திருமண மண்டபத்தில் மதுபாட்டில்களை இறக்கி வைக்க வந்த லாரியை மடக்கி மதுபானங்களை கடத்தி வந்ததால் வினோத் கைது செய்யப்பட்டார்.

    மேலும் அவர் தெரிவித்த தகவலின்படி போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக திருக்குமரன் என்பவர் ஓட்டி வந்த காரை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனையிட்டனர். அதிலும் 10 பெட்டிகளில் 498 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கைப்பற்றிய போலீசார் திருக் குமரனை கைது செய்தனர்.

    இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஆர்.எஸ்.மங்கலம் ராஜகுரு(வயது 43) மற்றும் மதுபானங்களை கடத்தி வந்து சேர்க்கும் ஏஜெண்டாக சுப்புத்தேவன்வலையை சேர்ந்த மணிகண்டன்(27) ஆகியோர் செயல்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இவர்கள் கூட்டாக சேர்ந்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய, திருமண மண்டபத்துக்கு அரசு மதுபானக்கடையில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றி வரும் லாரியை நிறுத்தி, அதில் இருந்து மதுபாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களையும் கைது செய்தனர்.

    மேலும் லோடு மேன் ஆர்.எஸ்.மங்கலம் செங்கமடையை சேர்ந்த கோவிந்தராஜ்(31), லாரி டிரைவர் காருகுடி வளமூர்த்தி (47) ஆகியோரை அடுத்தடுத்து போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 996 மதுபாட்டில்களையும், ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்கள் கடத்தல் தொடர்பாக டாஸ்மாக்கடை மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் கைதானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிவகங்கை மாவட்டத்தில் மதுக்கடைகளில் உள்ள மதுப்பாட்டில்களை அரசு குடோனுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து கடைகளில் இருந்தும் மதுபாட்டில்கள் போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றப்பட்டன. இந்த நிலையில் காரைக்குடி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்கள் குடோனுக்கு எடுத்து செல்லப்படும் தகவலை அறிந்த குடிமகன்கள் ஏராளமானோர் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை முன்பு குவிந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனாலும் அவர்கள் மதுபாட்டில்கள் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் கால் கடுக்க சுமார் 2 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    Next Story
    ×