search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டி.
    X
    கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டி.

    கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டியால் விபத்து அபாயம்

    கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டியால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் நகரில் இருந்து ஊட்டி, மைசூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதுதவிர சுல்தான்பத்தேரி, மலப்புரம், கோழிக்கோடுக்கு மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. இதனால் 3 மாநிலங்களை இணைக்கும் மையமாக கூடலூர் திகழ்கிறது. இந்த நிலையில் கூடலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. பள்ளிகள், கல்லூரி செயல்படும் காலங்களில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பழைய பஸ் நிலையம் வழியாக நடந்து செல்கின்றனர்.

    இதனால் மக்கள் கூட்டம் மட்டுமின்றி போக்குவரத்து நெருக்கடியும் மிகுந்து காணப்படும். இதேபோல் ஏராளமான பயணிகளும் சாலையோரம் அரசு பஸ்களுக்காக காத்து நிற்கின்றனர். கேரளா மற்றும் பந்தலூர் தாலுகா பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கூடலூர் வருகை தருகின்றனர். பின்னர் தங்களது பணிகளை முடித்து கொண்டு பழைய பஸ் நிலைய நிறுத்தத்தில் வந்து காத்து நிற்கின்றனர். இந்த சமயத்தில் தங்களது குழந்தைகளுடன் பஸ்சின் வருகைக்காக சாலையோரம் நிற்கின்றனர். மேலும் ஏராளமான பள்ளி மாணவ- மாணவிகளும் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள நடைபாதைகளில் நடக்கின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பாகத்தில் மிகவும் தாழ்வாக திறந்த நிலையில் மின்சார பெட்டி உள்ளது. இது கூடலூர் பழைய பஸ் நிலையம் முதல் கோழிக்கோடு சாலையில் இரவு தெருவிளக்குகளை எரிய வைப்பதற்கான சுவிட்ச் பெட்டியாக உள்ளது. அதாவது தரையில் இருந்து 3 அடி உயரத்தில் மின்சார பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது அதன் கதவுகள் உடைந்து திறந்து கிடக்கிறது. பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளின் குழந்தைகள் அல்லது பள்ளிகள் சென்று விட்டு வீடு திரும்பும் மாணவ-மாணவிகள் விளையாட்டாக மின்சார பெட்டியில் கை வைத்து விட வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் மின்சார பெட்டி திறந்து கிடக்கிறது. அதனை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி மின்வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லபட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எப்போது தாழ்வான பகுதியில் மின்சார பெட்டி திறந்தே கிடக்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் விரைவாக தடுப்பு நடவடிக்கைகளை மின்வாரிய துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×