search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    வடலூரில் அதிமுக பிரமுகர் கட்டையால் அடித்து கொலை

    கடலூர் மாவட்டம் வடலூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அ.தி.மு.க. பிரமுகர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள நெத்தனாங்குப்பம், தங்கராசு நகரை சேர்ந்தவர் காந்தாராவ் (வயது 55) அ.தி.மு.க பிரமுகர். இவர் என்.எல்.சி சொசைட்டியில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி பார்வதி (50). இவர்களுக்கு சந்தியா(30), சுகந்தி (20) ஆகிய மகள்களும், செல்வமணி (24), செல்வகுமார்(21) ஆகிய மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் செல்வகுமாருக்கும் அதேபகுதியை சேர்ந்த வாலிபர் அருள்(20) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    நெத்தனாங்குப்பம், தங்கராசு நகரில் நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள். அவர்கள் மைக்செட் வைத்து விழா நடத்தினார்கள். இந்த விழாவில் காந்தாராவ் மகன் செல்வகுமார், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கேக் வெட்டுவதற்காக காந்தாராவ் வீட்டில் இருந்து சிலர் பெஞ்சை அங்கு தூக்கிகொண்டு வந்தனர்.

    நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே தனது மகன் செல்வகுமார் புத்தாண்டு விழாவில் கலந்துகொள்ள சென்றிருக்கும் தகவல் காந்தாராவ்வுக்கு தெரியவந்தது. உடனே அவர் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றார்.

    பின்பு அங்கிருந்த தனது மகன் செல்வகுமாரை வீட்டிற்கு வரும்படி அழைத்தார். மேலும் அங்கு கேக் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த தனது வீட்டின் பெஞ்சை தூக்க முயன்றார். அப்போது அங்கு நின்ற வாலிபர்கள் கேக்வெட்டும் முன்பே பெஞ்சை ஏன் தூக்குகிறீர்கள் என்று தட்டிகேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அந்த வாலிபர்கள் திடீரென்று அவரை தாக்கினர். கல்லாலும் அங்கிருந்த கட்டையாலும் காந்தாராவ் நெஞ்சில் சரமாரியாக தாக்கினார்கள்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் நெஞ்சை பிடித்தபடி வீட்டிற்கு சென்றபோது கீழே விழுந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் காந்தாராவ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலஹாசன், பூவராகவன், இருதயராஜ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை தொடர்பாக அந்தபகுதியை சேர்ந்த சதீஷ்குமார், அருள், ரஞ்சித்குமார் ஆகிய 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அ.திமு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம்அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×