search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்ன வெங்காயம் அழுகி உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    சின்ன வெங்காயம் அழுகி உள்ளதை படத்தில் காணலாம்.

    வெண்ணந்தூர் பகுதியில் கனமழை- 300 ஏக்கரில் சின்ன வெங்காயம் அழுகி நாசம்

    வெண்ணந்தூர் பகுதியில் கனமழை காரணமாக சுமார் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காய பயிர்கள் அழுகி நாசம் அடைந்தது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    வெண்ணந்தூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர், அலவாய்பட்டி, அத்தனூர், நாச்சிப்பட்டி, சவுதாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300 ஏக்கருக்கும் மேலாக ஐப்பசி பட்டத்தில் வெங்காய பயிர்களை நடவு செய்து வந்தனர்.

    இன்னும் 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி வெளியேறமுடியால் வயல்களில் தேங்கி நிற்பதால் வெங்காய பயிர்களின் வேர் அழுகி திருகல் நோய் தாக்கி வெங்காய பயிர்கள் முழுவதும் நாசமடைந்து விட்டது.

    இந்த வருடம் புதிதாக வந்துள்ள திருகல் நோயினால் விவசாயிகள் பெரும் ந‌‌ஷ்டம் அடைந்து வருகின்றனர். இந்த நோய்க்கு உரிய மருந்து இல்லை என்பதால் வேறு எதையாவது மருந்துகளை அடித்து சரியாகும் என்று பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து மருந்து தெளித்தும் எந்த பயனும் இன்றி சின்ன வெங்காயம் அழுகி வீணாகிறது. தமிழக அரசு இந்த நோய்க்கு உடனடியாக மருந்து கண்டுபிடித்து அதனை அந்தந்த தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினால் மட்டுமே வெங்காய மகசூல் எடுக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது உயர்ந்து வரும் வெங்காய விலைக்கு முக்கிய காரணமாக இந்த நோய் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த நோய்க்கு பயந்து விவசாயிகள் ஆவணி மற்றும் புரட்டாசி பட்டத்தில் வெங்காய சாகுபடி செய்ய முன்வரவில்லை.

    எனவே வரும் காலங்களில் திருகல் நோய்க்கு உரிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே விவசாயிகள் எப்போதும் போல் வெங்காய சாகுபடி செய்ய முன்வருவார்கள். தற்போது அதிக அளவில் மழை பெய்து வருவதால் வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 300 ஏக்கருக்கும் மேலான வெங்காய பயிர்கள் தண்ணீரில் அழுகி நாசமடைந்து உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் ந‌‌ஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்வேண்டும் என வெங்காயம் பயிரிட்டிருந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×