search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரத்தில் மறியல் செய்த ஜனநாயக மாதர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
    X
    தாம்பரத்தில் மறியல் செய்த ஜனநாயக மாதர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

    தாம்பரத்தில் சாலை மறியல்- ஜனநாயக மாதர் சங்கத்தினர் 300 பேர் கைது

    கோட்டைக்கு பேரணியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தாம்பரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினரை சேர்ந்த 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    வன்முறையற்ற போதை இல்லாத தமிழகம் அமைப்போம் என்ற கோரிக்கையுடன் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 400 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டனர்.

    நவம்பர் 25-ந்தேதி கடலூர் மாவட்டம் வடலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து தொடங்கிய இந்த நடை பயணத்தில் 300-க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர். நேற்று மாலை தாம்பரம் வந்தடைந்த இவர்கள் ஒரு தனியார் மண்டபத்தில் தங்கினார்கள்.

    இன்று காலை அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தாம்பரத்தில் இருந்து பேரணியாக கோட்டைக்கு சென்று, முதல்- அமைச்சரிடம் மனு கொடுக்க திட்டமிட்டு இருந்தனர். இதற்காக தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஒன்று கூடினார்கள்.

    காலை 10 மணியளவில் ஜனநாயக மாதர் சங்க பெண்கள் கோட்டை நோக்கி செல்ல தயாரானார்கள். அப்போது அவர்களை தடுத்த போலீசார், “கோட்டைக்கு பேரணியாக செல்ல அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து ஊர்வலமாக செல்லக்கூடாது” என்று தெரிவித்தனர்.

    இதற்கு ஜனநாயக மாதர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தடையை மீறி ஊர்வலம் செல்ல தயாரான அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் தொடர்ந்து மறியல் செய்தார்கள். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அனைவரையும் போலீஸ் வேன்களில் ஏற்றி கொண்டு சென்றனர். கைதான பெண்கள் தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மறியல் காரணமாக காலை 10 மணி முதல் 11 மணி வரை தாம்பரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைதானவர்களை அங்கிருந்து கொண்டு சென்ற பிறகு போக்குவரத்து சீரானது.
    Next Story
    ×