search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    மரக்காணம் பகுதியில் பலத்த மழை - தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் 10 கிராம மக்கள் தவிப்பு

    மரக்காணம் பகுதியில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் 10 கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. விழுப்புரம், செஞ்சி, மரக்காணம், மயிலம், விக்கிரவாண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இரவு நேரத்தில் பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்மழையினால் ஏரி, குளங்கள் நிரம்பின.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காணிமேடு- மண்டகப்பட்டு கிராமங்களுக்கு இடையே ஓங்கூர் ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

    இந்த தரைப்பாலம் ஆற்றின் குறுக்கே தாழ்வான நிலையில் உள்ளது.

    இந்த தரைப்பாலத்தின் வழியாக காணிமேடு, மண்டகப்பட்டு, வெள்ள கொண்டாகரம், புதுப்பேட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இருசக்கர வாகனத்தில் சென்று வந்தனர்.

    இந்த பாலத்தின் வழியாக புதுவை மற்றும் சென்னை, மரக்காணம் போன்ற இடங்களுக்கும் பொதுமக்கள் சென்றார்கள்.

    மரக்காணம் பகுதியில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

    தரைப்பாலத்தின் மேல் 3 உயரத்திற்கு தண்ணீர் ஓடியது. இதனால் தரைப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கி விட்டது. தொடர்ந்து தண்ணீரின் அளவு அதிகரித்து வந்தால் தரைப்பாலம் உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் காணிமேடு, மண்டகப்பட்டு, புதுப்பேட்டை உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் இந்த தரைப்பாலத்தின் வழியாக செல்லாமல் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கிய தகவல் தெரிந்ததும் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்பேரேயாசிங், மரக்காணம் தாசில்தார் ஞானம் மற்றும் அதிகாரிகள் வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலத்தை பார்வையிட்டனர்.

    வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் அருகே பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டனர். அவர்கள் பாலத்தை சுற்றியுள்ள முள்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலையின் வழியாக வெள்ளநீர் செல்வதை தடுக்க மண் மூட்டைகளை அடுக்கி வருகிறார்கள்.
    Next Story
    ×