என் மலர்
செய்திகள்

ஜோலார்பேட்டை பஸ் நிலையம் அருகே டி.வி. நாடக ஒளிப்பதிவாளர் மர்ம மரணம்
ஜோலார்பேட்டை:
சென்னை வளசரவாக்கம் கெங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 47). டி.வி. நாடகங்களில் கேமரா ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராகவி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சசிகுமார் வேலை பார்த்த ஸ்டுடியோவில் இருந்த கேமராவை ரூ.3 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அவரால் மீட்டு நிறுவனத்துக்கு திருப்பி தர முடியவில்லை.
இதனையடுத்து ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் அளித்தனர்.
இதனால் மனமுடைந்த சசிகுமார் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஏரிக்கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் சசிகுமார் பிணமாக தொங்கினார். அவர் பிணமாக தொங்குவதை கண்ட பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவரது சட்டைப் பையிலிருந்த மணிபர்சில் மனைவி குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோ இருந்தது.
மேலும் அவரது செல்போன் மூலம் அவர் யார் என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். இதுபற்றி வளசரவாக்கத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவரது மனைவி ராகவி சசிகுமார் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






