என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் கணவன், மனைவி தற்கொலை
    X

    கரூரில் கணவன், மனைவி தற்கொலை

    பிள்ளைகள் இல்லாத ஏக்கம், நோய் ஆகியவற்றால் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கரூர்:

    கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 80). இவரது மனைவி வள்ளியம்மாள் (70). இந்த தம்பதிக்கு பிள்ளைகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முருகன் பந்தல் அமைக்கும் காண்டிராக்ட் தொழில் செய்து வந்தார்.

    உடல் நலக்குறைவு காரணமாக தொழிலை கைவிட்டார். வள்ளியம்மாள் ஜவுளி நிறுவனங்களுக்கு தினக் கூலி அடிப்படையில் ஆட்களை அனுப்பும் தொழிலை மேற்கொண்டு வந்தார். அதில் கிடைக்கும் கமி‌ஷன் தொகையை கொண்டு கணவன், மனைவி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முருகனுக்கு பக்கவாதம் நோய் வந்தது. அவரது உறவினர்கள் முருகனை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் நோய் முற்றிலும் குணமாகவில்லை. மேலும் அவர் படுத்த படுக்கையாக இருந்தார்.

    தொடர்ந்து அவரது உறவினர்கள் உதவிகள் செய்து வந்த போதிலும் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. உறவினர்களை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று அடிக்கடி கணவன், மனைவி இருவரும் வருத்தப்பட்டு வந்தனர். எனவே அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

    நேற்று இரவு தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் வி‌ஷ மாத்திரைகளை தம்பதியினர் இருவரும் தின்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு அருகில் வசித்து வரும் முருகனின் சகோதரர் மகன் ரவி ஓடிவந்து பார்த்தார்.

    அங்கு இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் சிறிது நேரத்தில் முருகனும், அவரை தொடர்ந்து வள்ளியம்மாளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×