search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
    X

    வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

    வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். #Duraimurugan #DMK #Raid
    வேலூர்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீடு வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ளது.

    சென்னையில் அவருக்கு கோட்டூர்புரத்தில் வீடு இருக்கிறது.

    சென்னையில் அரசியல் பணிகள் இல்லாத நாட்களில் துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வது வழக்கம். தற்போது பாராளுமன்ற தேர்தலில் அவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    கதிர்ஆனந்துக்கு ஆதரவாக துரைமுருகன் வேலூர் தொகுதியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு அவர் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு காந்திநகரில் உள்ள வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    இதற்கிடையே வேலூர் தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து வருமானவரித்துறையினரும், பறக்கும் படையினரும் வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

    இரவு 11.30 மணியளவில் மனோஜ், முரளிதரன், சதீஷ் ஆகியோர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டுக்கு வந்தனர். அப்போது, துரைமுருகன் வீட்டில் இல்லை.

    அவர் வருவதற்குள், அதிகாரிகள் உள்ளே சென்று அறையில் அமர்ந்தனர். வருமானவரி சோதனை நடத்த வந்திருப்பதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் துரைமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து துரைமுருகன் காந்திநகரில் உள்ள வீட்டுக்கு விரைந்து வந்தார். அவரிடம் வீட்டுக்குள் இருந்த அதிகாரிகள், “நாங்கள் வருமானவரித் துறை அதிகாரிகள், உங்கள் வீட்டில் சோதனை நடத்த வந்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

    இதைக்கேட்ட துரைமுருகன் உடனடியாக தன்னுடைய வக்கீல்களை வரவழைத்தார். அவர்கள் அதிகாரிகளிடம் இருந்த அடையாள அட்டைகளை வாங்கி சரி பார்த்தனர். அதில், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் என்று குறிப்பிட்டு இருந்தது.

    இதையடுத்து தேர்தல் பார்வையாளர்கள் எப்படி வீட்டுக்குள் சோதனையிட முடியும் என்று வக்கீல்கள் கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து வக்கீல்களுக்கும், வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.



    சிறிது நேரத்தில், வருமானவரித் துறை அதிகாரி விஜய் தீபன் அங்கு வந்தார். என்னுடைய தலைமையிலான குழுவினர்தான் அவர்கள் என்று வக்கீல்களிடம் கூறினார்.

    ஆனாலும், வீடுகளில் சோதனை செய்யலாம் என்று அதில் குறிப்பிடப் படவில்லையே என்று தெரிவித்த வக்கீல்கள், துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்த அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் நீடித்தது.

    இதற்கிடையே துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்திருக்கும் தகவல் தி.மு.க. நிர்வாகிகளிடையே பரவியது. ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் துரைமுருகன் வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    துரைமுருகன் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் சோதனை நடத்தாமல் செல்லமாட்டோம் என்று வருமானவரித்துறையும், பறக்கும் படையினரும் உறுதியாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு 4 பேர் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர்.

    காலை 5.45 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் 3 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் வீட்டிற்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    துரைமுருகன் வீட்டில் உள்ள அறைகள், மாடியில் உள்ள அறைகள், தண்ணீர் தொட்டி, துரைமுருகனுக்கு சொந்தமான கார்கள் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. வீட்டுக்குள் இருந்த சில ஆவணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றி விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

    அதற்கு துரைமுருகன் பதில் அளித்தார். இதுபற்றிய முழுமையான விவரங்களை வருமானவரித்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    காலை 8.30 மணிக்கு சோதனையில் ஒரு பகுதி முடிந்தது. சோதனையில் ஈடுபட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் 7 பேரில் 3 பேர் வெளியே வந்தனர். அவர்கள் துரைமுருகன் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை காரில் எடுத்து சென்றனர். 4 அதிகாரிகள் வீட்டில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.



    காலை 9 மணியளவில் அவர்களும் தங்களது சோதனையை நிறைவு செய்தனர். சுமார் 6 மணி நேரம் துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின் போது பாதுகாப்பு கருதி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பாலகிருஷ்ணன், சங்கர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் துரைமுருகன் மகனுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளி உள்ளது. வாக்காளர்களுக்கான பணப்பட்டு வாடா புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகளும், பறக்கும் படையினரும் அங்கும் சோதனை நடத்தினார்கள்.

    இன்று காலை 6 மணிக்கு 7 பேர் கொண்ட குழுவினர் கல்லூரிக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு சோதனை நீடித்து வருகிறது.

    வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர். இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் சென்னை வருமான வரித்துறை அதிகாரி நாராயணன் சவுடா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்த அதிரடியாக நுழைந்தனர்.

    அங்கு வீட்டில் இருந்த தேவராஜின் மனைவியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவலை தெரிவித்து சோதனையை உடனடியாக மேற்கொண்டனர். நள்ளிரவு 1 மணி வரை நடத்திய சோதனையில் எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொதியில் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    காலை 10 மணியளவில் பிரசாரம் தொடங்கும் அவர் மாலை 5 மணியளவில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற் கொள்கிறார். இரவு வேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை யாற்றுகிறார்.

    தொடர்ந்து 1-ந் தேதி அரக்கோணம் மக்களவை தொகுதியில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த நிலையில் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #Duraimurugan #DMK #Raid
    Next Story
    ×