search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்
    X
    பொள்ளாச்சி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

    பாலியல் சம்பவத்தை கண்டித்து பொள்ளாச்சியில் இன்று கடை அடைப்பு

    பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. #PollachiAbuseCase
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு அவரது நண்பர்கள் சபரி ராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    நேற்று விசாரணை முடிந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையின் போது திருநாவுக்கரசு பல்வேறு தகவல்களை கூறியதாக தெரிகிறது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சபரி ராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அவர்களை காவலில் எடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பொள்ளாச்சி நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே ஒருசில கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

    கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், மாடசாமி ஆகியோர் தலைமையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொள்ளாச்சி காந்தி சிலை, கடை வீதி, கோவை ரோடு, திருவள்ளூவர் திடல், தேர் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரி கோவையில் இன்று வக்கீல்கள் 2- வது நாளாக கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiAbuseCase
    Next Story
    ×