search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னதம்பி யானையின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்- ஐகோர்ட் உத்தரவு
    X

    சின்னதம்பி யானையின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்- ஐகோர்ட் உத்தரவு

    சின்னதம்பி யானையின் பாதுகாப்பை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ChinnathambiElephant #MadrasHC
    சென்னை:

    கோவை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்துள்ள சின்னதம்பி யானையை முகாமில் அடைக்க வேண்டும் என்றும் வனப்பகுதிக்கு அருகே சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் முரளிதரன் என்ற வன விலங்கு ஆர்வலர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கிற்கு, பதில் மனு தாக்கல் செய்த தமிழக வனத்துறை, சின்னதம்பி யானை வனப்பகுதியையும், மக்கள் வசிக்கும் பகுதியையும் ஒன்றே என்று நினைக்கிறது. அதில் உள்ள வித்தியாசத்தை மறந்து விட்டது. மக்கள் கூச்சல் போட்டு விரட்டினால், பொதுவாக காட்டு யானைகள், காட்டுக்குள் ஓடும். ஆனால், சின்னதம்பி யானை இதை கண்டுகொள்ளாமல் உள்ளது.

    அதை விரட்டினால் காட்டுக்குள் ஓடுவதற்கு பதில் ஊருக்குள் ஓடுகிறது. எனவே இந்த யானையை பிடித்து முகாமில் அடைத்து, அங்குள்ள பிற யானைகளுக்கு அளிக்கும் பயிற்சியை போல சின்னதம்பிக்கும் பயிற்சி அளிப்பதை தவிர வேறு வழியில்லை’ என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.



    இந்த நிலையில், நீதிபதிகள் முன்பு அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘சின்னதம்பி யானை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ள விலங்குகள் நல ஆர்வலர் சென்னை வந்துள்ளார். அவர் இந்த ஐகோர்ட்டில் ஆஜராகி யானை குறித்து விளக்கம் அளிப்பார். அதனால் இந்த வழக்கை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    அப்போது நீதிபதிகள், ‘அந்த யானை இப்போது எங்கு உள்ளது? வனப்பகுதிக்கும், அது நிற்கும் பகுதிக்கும் எவ்வளவு தூரம் உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘தற்போது திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள வனப்பகுதி கிராமங்களை சுற்றி வருகிறது. வனப்பகுதிக்கும், அது இருக்கும் பகுதிக்கும் 15 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அந்த யானை ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று பழகிவிட்டது. அதனால், இயற்கை உணவை அது மறந்து விட்டது’ என்றார்.

    அப்போது நீதிபதிகள், அந்த இயற்கை உணவை வழங்கி, காட்டுக்குள் விரட்டினால் என்ன? என்று கேள்வி எழுப்பினர். இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உத்தரவிட்டனர். அதே நேரம் சின்னதம்பி யானையின் பாதுகாப்பை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
    Next Story
    ×