search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தபால் நிலையங்களில் பிரதமர் தொடங்கி வைத்த புதிய பாஸ்போர்ட்டு சேவை மையங்கள்
    X

    தபால் நிலையங்களில் பிரதமர் தொடங்கி வைத்த புதிய பாஸ்போர்ட்டு சேவை மையங்கள்

    தமிழகத்தில் தலைமை தபால் நிலையங்களில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. #Passport #PostOffice
    சென்னை:

    தமிழகத்தில் தலைமை தபால் நிலையங்களில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மையங்களில் பாஸ்போர்ட்டு விண்ணப்பித்து பயனடையலாம் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி பி.கே.அசோக்பாபு கூறினார்.

    தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய 4 மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகங்களின் கீழ் 12 தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் தமிழகத்தில் சென்னை (வடக்கு) கடற்கரை ரெயில் நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம், ராணிப்பேட்டை, ஆரணி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ராஜபாளையம், போடிநாயக்கனூர், ராமநாதபுரம், குன்னூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய 12 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்டு சேவை மையங்களை, மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார்.

    இதில் சென்னை மண்டல அலுவலகத்தின் கீழ் 7 தலைமை தபால் நிலையங்களில் 7 புதிய சேவை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் அனுப்பப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி பி.கே.அசோக்பாபு கூறியதாவது:-

    பாஸ்போர்ட்டு வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவதற்காக பல்வேறு ஒருங்கிணைந்த சேவையை மேம்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 2010-ம் ஆண்டு பாஸ்போர்ட்டு சேவா திட்டதை அறிமுகப்படுத்தியது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் பாஸ்போட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதில் தொடங்கி, நேர்காணலுக்கு நாள் குறித்தல் பயோமெட்ரிக் பதிவு செய்தல் மற்றும் பாஸ்போர்ட்டு வழங்குவது வரை அனைத்து செயல்முறைகளும் மின்னணு பரிவர்த்தனை மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. தற்போது விரைவாக பாஸ்போர்ட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மண்டலத்தின் கீழ் சென்னை, எண் 1/10, ராஜாஜி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், காஞ்சீபுரம், எண்.46, ரெயில்வே சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், திருவள்ளூரில், எண். 37, ஜே.என்.சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், ராணிப்பேட்டையில், ஆற்காடு சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், ஆரணியில், என்-2ஏ, சூரியகுளம் வடக்கு தெருவில் உள்ள தலைமை தபால் நலையம், கள்ளக்குறிச்சியில், எண்-23, காந்தி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், தர்மபுரியில் எண்-16-ஏ, நாச்சியப்பா தெருவில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் செயல்படும்.

    இந்த மையங்களில் புதிய பாஸ்போர்ட்டு விண்ணப்பம், பழைய பாஸ்போர்ட்டு புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் அளிக்கலாம். அத்துடன் பாஸ்போர்ட்டு பெறுவதற்காக முன்அனுமதியும் பெறலாம். விண்ணப்பதாரர் புகைப்படம் எடுப்பது மற்றும் கைவிரல் ரேகை பதிவு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. பாஸ்போர்ட்டு கட்டணங்களையும் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்தப்பட வேண்டும்.

    சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 4 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையமும், புதுச்சேரி மற்றும் சென்னையில் சாலிக்கிராமம், அமைந்தகரை, தாம்பரம் ஆகிய 4 இடங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையமும் செயல்பட்டு வருகிறது.

    தற்போது திறக்கப்பட்ட மையங்களுடன் சேர்த்து சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் 11 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு கேட்டு விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையிலான பாஸ்போர்ட்டு சென்னை, அண்ணாசாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. காவல் துறை சான்றிதழ் போன்ற சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி அல்லது சென்னையில் உள்ள பாஸ்போர்ட்டு சேவை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×