search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பொள்ளாச்சியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1-ம் வகுப்பு மாணவி மரணம்
    X

    பொள்ளாச்சியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1-ம் வகுப்பு மாணவி மரணம்

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகள் அமுதா (வயது 7). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மகேஸ்வரி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 2 மாதங்களாக தனது மகளுடன் வசித்து வந்தார்.

    இவர் நேற்று தனது மகள் அமுதாவை பள்ளியில் விட்டு விட்டு கட்டிட வேலைக்கு சென்றார். ஜாக்டோ- ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. எனவே பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இதனையடுத்து அமுதா வீட்டுக்கு திரும்பினார். பின்னர் வீட்டின் முன்புறம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் மீன்களை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி 7 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய மகேஸ்வரி தனது மகளை அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது மகள் அமுதா தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

    இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×