search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவுடன் கூட்டணியா?  - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
    X

    பா.ஜனதாவுடன் கூட்டணியா? - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

    பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். #OPS #BJP
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 75 நாட்களே உள்ளதால் அதை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    தமிழ்நாட்டில் எதிர்கட்சியான தி.முக. காங்கிரசுடன் கூட்டணி வைக்கப்போவதாக அறிவித்துவிட்டது.

    இந்த கூட்டணியில் மார்க். கம்யூனிஸ்டு, இந்திய. கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைகின்றன.



    பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேரலாம் என்று கூறப்படுகிறது. என்றாலும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    வருகிற 18-ந்தேதி பா.ஜனதா மூத்த தலைவர் பியூஸ்கோயல் சென்னை வந்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதன்பிறகே பா.ஜனதா கூட்டணி பற்றிய முழு விவரம் தெரியவரும்.

    இந்த நிலையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்தில் தேர்தல் கூட்டணி சம்பந்தமான கேள்விக்கு பதில் அளித்தார். அவரது பேட்டி:-

    கே:- பா.ஜனதாவுடன் 2004-ல் அ.தி.மு.க. கூட்டணி வைத்தது. தி.மு.க.வும் கூட்டணி வைத்திருக்கிறது. பழைய நண்பர்களை கூட்டணியில் சேர்க்க கதவு திறந்து இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அதை ஏற்று பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைக்குமா?

    ப:- தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    கே:- பிரதமர் வர இருக்கிறார். வருகிற 18-ந்தேதி தமிழகம் வரும் மத்திய மந்திரி பியூஸ்கோயல் உங்களை சந்திக்க இருப்பதாகவும், அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டதாகவும், இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறதே?

    ப:- பிரதமர் வருவதோ, சந்திப்பதோ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பியூஸ் கோயல் எங்களை சந்திப்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை. சில ஊடகங்கள் அவர்களாகவே இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள்.

    கேள்வி: கொடநாடு பிரச்சினையில் முதல்-அமைச்சர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதே?

    பதில்:- இது 2 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். சக்தியற்ற எதிர்கட்சிகள் அரசியல் ரீதியாக எங்களை சந்திக்க முடியாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றன. அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். அது நடக்காது.

    எதிர்க்கட்சிகளின் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொள்வோம். நியாயம் எங்கள் பக்கம் உள்ளது. இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கே:- உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததற்கு அ.தி.மு.க.தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

    ப:- உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள முடியாமல், கோர்ட்டுக்கு சென்றது தி.மு.க.தான். நாங்கள் தேர்தலை சந்திக்க பயப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #OPS #BJP

    Next Story
    ×