search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் சீட் வழங்க கூடாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ
    X

    மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் சீட் வழங்க கூடாது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

    வருகின்ற தேர்தல்களில் மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ADMK #MinisterKadamburRaju
    கோவில்பட்டி:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 2 எம்.எல்.ஏ.க்களில், ஒட்டப்பிடாரத்தில் வெற்றி பெற்ற சுந்தரராஜன் தி.மு.க.வில் இருந்து வந்தவர். விளாத்திகுளம் உமா மகேஸ்வரி தே.மு.தி.க.வில் இருந்து வந்தவர். அ.தி.மு.க., தி.மு.க.வில் தொடக்கத்தில் இருந்து இருப்பவர்கள் கட்சி மாற மாட்டார்கள்.


    செந்தில் பாலாஜி ஏற்கனவே, ம.தி.மு.க., தி.மு.க.வில் உறுப்பினராக இருந்துள்ளார். அங்கிருந்து தான் அ.தி.மு.க.வுக்கு வந்தவர். அவர் தி.மு.க.வில் செல்லும் நிலைப்பாட்டில் இருக்கலாம். அதனால், தான் ஏற்கனவே சொன்னேன்.

    வருகின்ற தேர்தல்களில் மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடாது. அ.தி.மு.க.வில் உள்ளவர்களுக்கும், விசுவாசிகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். கட்சி மாறி வருபவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

    மேகதாது திட்ட அறிக்கை தொடங்குவதற்கு தமிழகம் மட்டுமல்ல புதுவை முதல்வர் நாராயணசாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேகதாது அணை பிரச்சனையை பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம், அந்தந்த மாநிலங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்பது விதி. விதிகளுக்கு உட்பட்டு எங்கள் கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து, மேகதாதுவில் அணை கட்டுவதை அரசு தடுக்கும்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் அரசு அழைத்து பேச தயாராக உள்ளது. வருவாய்த்துறை அமைச்சர், அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியுள்ளார். நிச்சயமாக அவர்களை அழைத்து பேசும்போது, சுமூக தீர்வு காணப்படும்.

    திரைப்பட தணிக்கைக்குழுவில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருந்தால் தான், அவர்கள் மாநிலத்தின் பிரச்சனைகளை எடுத்து கூறி, மாநிலத்தில் தாக்கம் ஏற்படக்கூடிய வி‌ஷயம் இருக்குமாயின், அதனை தணிக்கை நடைபெறும் நேரத்தில் தடுக்க முடியும்.

    மாநில அரசின் பிரதிநிதித்துவம் இல்லாததால் இதுபோன்ற நிலை உள்ளது. இதனை எடுத்து கூறியுள்ளோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்ய போகிறோம் என்றார்கள். அதன் பின்னர் இல்லை என்றனர்.

    அது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அவர்களின் உரிமையில் தலையிட முடியாது. எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. அதனை சந்திக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterKadamburRaju
    Next Story
    ×