search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்றாலும் நிவாரண உதவி வழங்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு
    X

    புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்றாலும் நிவாரண உதவி வழங்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு

    புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்றாலும் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். சாய்ந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில் கஜா புயலால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாகவும், சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்.

    மத்திய அரசின் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்களை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைக்க வேண்டும். மின் இணைப்பை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீட்பு பணியில் முப்படையினரையும், துணை ராணுவ படையினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


    புயல் நிவாரண பணிகள் குறித்து தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்த முருகேசனும் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்குகள் கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

    அதை தொடர்ந்து நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கஜா புயல் இடைக்கால நிவாரணத்தை ஒரு வாரத்துக்குள் அறிவிக்க வேண்டும், பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 5-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கஜா புயலில் பாதித்த பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது.

    இதுவரை 97 ஆயிரத்து 200 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. முழுமையாக மின் விநியோகம் செய்ய ஒரு வாரம் ஆகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்று கூறி அரசின் நிவாரண பொருட்களை திருப்பி அனுப்புவதாக தகவல் வந்துள்ளது. ஆதாரங்கள் இல்லை என்றாலும் நிவாரண பொருட்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் புகைப்பட ஆதாரம் இல்லை என்று கூறி நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பக் கூடாது. கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி பாதிப்பு விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #GajaCyclone #GajaCycloneRelief

    Next Story
    ×