search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்- நோயாளிகள் அவதி
    X

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்- நோயாளிகள் அவதி

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். #DoctorsStrike
    ராமநாதபுரம்:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாக்டர்கள் அறிவித்தனர்.

    அதன்படி ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியை புறக்கணித்தனர். இதனால் சிகிச்சைக்கு வந்த வெளி நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    போராட்டம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் மலையரசு கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கிட கோரி இன்று ஒரு நாள் வெளிநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். மாநில கூட்டமைப்பின் அறிவுரைப்படி ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் உள்ள 42 டாக்டர்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 10 மருத்துவமனைகள், 48 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது.

    மற்றபடி அவசர சிகிச்சைகள், வார்டில் தங்கி உள்ள உள் நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும். இந்த போராட்டம் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நடைபெறும். பொதுமக்கள் எங்கள் நியாயமான கோரிக்கையை உணர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும், என்றனர்.

    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் வெளிநோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று 1540 டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில பொருளாளர் டாக்டர் ராமு தெரிவித்தார். #DoctorsStrike
    Next Story
    ×