search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குவைத் நாட்டில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த புதுவை பெண் மீட்பு - சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை
    X

    குவைத் நாட்டில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த புதுவை பெண் மீட்பு - சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை

    குவைத் நாட்டில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த இந்திய பெண்ணை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நடவடிக்கையால் புதுவை மாநிலத்துக்கு அழைத்து வரப்பட்டார். #Sushmaswaraj

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் நகர் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி விஜய லட்சுமி (வயது 35). இவர், குடும்ப ஏழ்மையின் காரணமாக ஏஜெண்டு மூலம் குவைத்த நாட்டுக்கு வேலைக்கு சென்றார்.

    ஆனால், அந்த ஏஜெண்டின் தவறான வழிகாட்டுதலால் ஒரு வீட்டில் கொத்தடிமையாக விஜயலட்சுமி வேலைக்கு சேர்க்கப்பட்டார்.

    கடந்த 3 மாதங்களாக மிகுந்த சித்ரவதைக் குள்ளாக்கப்பட்டதால் மனமுடைந்த விஜயலட்சுமி அங்கு வி‌ஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    குவைத் அரசு ஆஸ்பத்திரியில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுபற்றி விஜயலட்சுமியின் குடும்பத்தினர் புதுவை பாரதிய ஜனதா கட்சியினரை தொடர்பு கொண்டு குவைத் நாட்டில் இருந்து விஜயலட்சுமியை மீட்குமாறு கேட்டு கொண்டனர்.

     


    இதுபற்றி புதுவை பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தகவல் தெரிவித்து முழு விவரங்களை அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு விஜயலட்சுமியை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.

    இதன் மூலம் விஜய லட்சுமியை எந்தவித பாதிப்பும் இன்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு புதுவைக்கு அனுப்பி வைத்தது.

    இதையடுத்து புதுவை வந்த விஜயலட்சுமி தனது கணவர் சந்திரமோகனுடன் புதுவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், செல்வம், பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார். #Sushmaswaraj

    Next Story
    ×