search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாய்க்கால் தூர்வாரும் பணியை கிரண்பேடி ஆய்வு செய்த காட்சி.
    X
    வாய்க்கால் தூர்வாரும் பணியை கிரண்பேடி ஆய்வு செய்த காட்சி.

    பல்நோக்கு ஊழியர்கள் அனைவரையும் மழை நிவாரண பணியில் ஈடுபடுத்த வேண்டும் - கவர்னர் கிரண்பேடி உத்தரவு

    எம்.எல்.ஏ. அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் உட்பட பல்நோக்கு ஊழியர்கள் அனைவரையும் மழை நிவாரண பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். #KiranBedi #PondicherryGovernor

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று நீர்நிலைகளை ஆய்வு நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தர விட்டு வருகிறார்.

    அதன்படி கவர்னர் மாளிகையின் சார்பில் 204-வது வார இறுதிநாள் ஆய்வு இன்று நடந்தது. கவர்னர் கிரண்பேடி, பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகளோடு நகர பகுதியில் ஆய்வு செய்தார்.

    தன்னார்வலர்கள் உதவியுடன் நகரில் உள்ள 4 வாய்க்கால்களை தலா ரூ.7 லட்சம் செலவில் சீரமைக்க கவர்னர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

    நகர பகுதியில் உள்ள பெரியவாய்க்கால், சின்ன வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை அவர் இன்று ஆய்வு செய்தார்.

    தன்னார்வலர்கள் நிதியளித்தும் பணியை மேற்கொள்ள பொதுப் பணித்துறையின் பல்நோக்கு ஊழியர்கள் அங்கு இல்லாததை கண்டு கவர்னர் கோபம் அடைந்தார்.

    பருவமழைக்காலம் முடியும்வரை பல்நோக்கு ஊழியர்களை காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 10 மணி வரையும் 2 ஷிப்ட் முறையில் பணி செய்ய வைக்கும்படி பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியருக்கு உத்தரவிட்டார்.


    அப்போது பல்நோக்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், ஊழியர்கள் சாலை பணி, நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணி, சட்டமன்ற அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளிட்ட மாற்று பணிகளில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை ஏற்க மறுத்த கவர்னர் கிரண்பேடி எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளிட்ட மாற்று பணிகளில் உள்ள அனைத்து பல்நோக்கு ஊழியர்களையும் உடனடியாக துறைக்கு திரும்ப அழைக்கும்படியும், பருவமழைக்காலம் முடியும் வரை அவர்கள் கால்வாய் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அதன்பின் மாற்று பணிகளுக்கு அனுப்பவும் உத்தரவிட்டார்.

    மேலும் வாய்க்கால் துப்புரவு பணியை செய்யாமல் காலம் கடத்தும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு ஒப்பந்ததாரருக்கு பணியை வழங்கும்படியும் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறும்போது, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டியது அவசியம். இதை செய்தால் மழை பாதிப்பு இருக்காது. நிவாரண நிதியும் வீணாகாது என்றார். #KiranBedi #PondicherryGovernor

    Next Story
    ×