search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை நடவடிக்கை
    X

    கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை நடவடிக்கை

    இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான 54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. #KarthiChidambaram #ED #AircelMaxisCase
    சென்னை:

    மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களான பீட்டர் முகர்ஜியும், அவரது மனைவி இந்திராணி முகர்ஜியும் ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

    கடந்த 2007-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதற்காக அன்னிய முதலீடுகள் பெற முடிவு செய்தனர்.

    ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பங்குகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு நிதி திரட்டப்பட்டன. இது தவிர நேரிடையாகவும் வெளிநாடுகளில் பணபரிமாற்றம் நடந்தன. அந்த வகையில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை விற்றதாக தெரிகிறது.

    வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ய வேண்டுமானால் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் பெற்ற விவகாரத்தில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.

    அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும். 2007-ம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இந்திராணி முகர்ஜி நிதி திரட்டிய போது மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தார்.

    அவர் செல்வாக்கை பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ்களை பெற்று கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    தடையில்லா சான்றிதழ் பெற்று கொடுப்பதற்கு கார்த்தி சிதம்பரம் கணிசமான தொகையை பெற்றதாகவும் புகார்கள் கூறப்பட்டன. புகார் கூறியவர்கள், “மொரீஷியஸ் நாட்டில் இருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு பணம் வந்துள்ளது” என்றனர்.

    இந்த பணத்தை பெறுவதற்கு கார்த்தி சிதம்பரம் தனி நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன.

    கார்த்தி சிதம்பரம் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவானது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை பல தடவை கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியது. நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் கார்த்தி சிதம்பரம் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    இது தொடர்பாக மீண்டும் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    24 நாட்கள் சிறைக்கு பிறகு கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டார்.


    இதற்கிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன பணப்பரிமாற்ற முறைகேட்டில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீதும் புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து அவரிடமும் விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ப.சிதம்பரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் தீவிரப்படுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன பணப்பரிமாற்ற முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல், ஊட்டியில் உள்ள 3 காட்டேஜ்கள் முடக்கப்பட்டுள்ளன.

    டெல்லி ஜார்பாக் பகுதியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் பங்களாவும் முடக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சோமர்செட் பகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ஒரு காட்டேஜும், பங்களாவும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான டென்னிஸ் கிளப் உள்ளது. அந்த சொத்தும் முடக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள ஒரு வங்கியில் அட்வான்டேஜ் ஸ்டெரடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ரூ.90 லட்சத்துக்கு பிக்சட்டெபாசிட் பணம் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாகும்.

    எனவே அந்த ரூ.90 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. #KarthiChidambaram #ED #AircelMaxisCase
    Next Story
    ×