search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே தொழில் அதிபர் மனைவி கடத்தல் வழக்கில் ஒருவர் கைது
    X

    மார்த்தாண்டம் அருகே தொழில் அதிபர் மனைவி கடத்தல் வழக்கில் ஒருவர் கைது

    தொழில் அதிபர் மனைவி கடத்தல் வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் கொடுங்குளத்தை சேர்ந்தவர் திருநாமச்செல்வன் (வயது 47). தொழில் அதிபர். திருநாமச்செல்வனின் மனைவி கலா ராணி (44). இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த கலா ராணி, திடீரென மாயமானார். மேலும் வீட்டில் இருந்த நகை, பணத்தையும் அவர் எடுத்து சென்றிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் திருநாமச்செல்வன், மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.

    அந்த புகாரில் தனது மனைவி கலா ராணியை அதே பகுதியை சேர்ந்த மரப்பட்டறை அதிபர் சதீஷ் (43) கடத்தி சென்றதாகவும், இந்த கடத்தலுக்கு அவரது நண்பர்கள் கண்ணன்விளையை சேர்ந்த முரளி மோகன் (57), வெட்டுமணியை சேர்ந்த மணிகண்டன், பள்ளியாடியை சேர்ந்த சுனில் குமார் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறியிருந்தார்.

    இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருநாமச்செல்வன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த கோர்ட்டு இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கலாராணியை மீட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்த உத்தரவிட்டது,

    மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, மார்த்தாண்டம் போலீசார் திருநாமச்செல்வன் புகார் குறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சதீஷ், முரளி மோகன், மணிகண்டன், சுனில் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் முரளிமோகன் கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கலா ராணியை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×