search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாசர்பாடியில் சீல் வைக்கப்பட்ட வெற்றிவேல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொள்ளை
    X

    வியாசர்பாடியில் சீல் வைக்கப்பட்ட வெற்றிவேல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொள்ளை

    வியாசர்பாடியில் சீல் வைக்கப்பட்ட வெற்றிவேல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ரூ.4 லட்சம் பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MLAsDisqualificationCase #Vetrivel

    சென்னை:

    பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெற்றிவேல், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்தார்.

    அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், முதல்வர் பற்றி விமர்சித்த காரணத்துக்காகவும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் வெற்றிவேலும் ஒருவர். இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி சர்மாநகரில் உள்ள அவரது அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாநகராட்சி அதிகாரிகள் வெற்றிவேலின் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அதன் பின்னர் தொடர்ந்து அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.

    இந்த நிலையில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள் மாடி வழியாக உள்ளே புகுந்தனர்.

    மாடியில் உள்ள கதவின் பூட்டை உடைத்து அலுவலகத்தில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு அமர்ந்து மது அருந்தினர். பின்னர் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர். மேஜையை இழுத்துப்போட்டு அதில் அமர்ந்து மது குடித்து கும்மாளமிட்டனர்.

    பின்னர் அங்கிருந்த 12 மின்விசிறிகள், 2 கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களை திருடிச் சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறும்போது, கொள்ளை சம்பவம் ஒரு வாரத்துக்குள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். கொள்ளையர்கள் யார்? என்பதை போலீசார் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றார். #MLAsDisqualificationCase #Vetrivel

    Next Story
    ×