search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவர்னரின் நிதி அதிகாரம் பறிப்பு - மத்திய உள்துறை நடவடிக்கை
    X

    புதுவை கவர்னரின் நிதி அதிகாரம் பறிப்பு - மத்திய உள்துறை நடவடிக்கை

    நிதி விவகாரத்தில் புதுவை முதல்-அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றும்படி மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதால், கவர்னர் கிரண்பேடியின் நிதி அதிகாரம் பறிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.#GovernorKiranBedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு வகையில் நெருக்கடி அளித்து வருகிறார்.

    திட்டங்களில் நிதி தொடர்பான கேள்வி எழுப்பி கோப்புகளை திருப்பி அனுப்பி வருகிறார். இதனால் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சமீபத்தில் வாரியம், கழகம், நிறுவனம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்குவதிலும் கவர்னர் தலையிட்டார்.

    வழக்கமாக பட்ஜெட்டில் இவற்றுக்கு நிதி ஒதுக்கப்படும். இந்த நிதி அவற்றுக்கு சென்றுவிடும். இதுகுறித்தும் கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளதால் அரசு நிறுவன, கழக, வாரிய ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ஏற்கனவே கவர்னருக்கு நிதி அதிகாரத்தை உயர்த்தி மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது. தற்போது திட்டங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளது.


    எனவே முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அமைச்சரவைக்கும் கூடுதலான நிதி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதன்படி புதுவை அரசு செயலர்களுக்கு ரூ.2 கோடிக்கு கூடுதலாகவும், நிதித்துறைக்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.5 கோடி வரையிலும், நிதி மந்திரிக்கு ரூ.5 கோடியிலிருந்து ரூ.50 கோடி வரையிலும், அமைச்சரவை பரிந்துரை செய்யும் திட்டங்களுக்கு நிதி நிலைக்குழுவுக்கு ரூ.50 கோடியிலிருந்து ரூ.100 கோடி வரையிலும், அமைச்சரவைக்கு ரூ.100 கோடியில் இருந்து திட்டங்களுக்கான மொத்த செலவு வரையிலும் நிதி அதிகாரத்தை அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயண சாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். டெண்டர் வழங்குவதற்கும் அமைச்சரவைக்கும், நிதி மந்திரி ஆகியோருக்கும் கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

    இந்த நிலையத்தில் தற்போது மத்திய உள்துறையின் சார்பு செயலர் சஞ்சய்குமார் புதுவை தலைமை செயலாளர் அஸ்வினி குமாருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் புதுவை முதல்-அமைச்சர் அனுப்பிய கடிதத்தை முழுமையாக பரிசீலனை செய்தோம். இதில் முதல்-அமைச்சர் கூடுதலாக கோரியுள்ள நிதி அதிகாரம் மாநில அரசை சுமூகமாக நடத்த அவசியம் தேவை என கருதுகிறோம்.

    எனவே கவர்னரின் நிதி அதிகாரத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பிரித்து பரவலாக்குவதும் அவசியம். எனவே முதல்-அமைச்சர் கோரியுள்ள அந்த நிதி அதிகாரத்தை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து தலைமை செயலாளர் இந்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்து ஒரு கோப்பாக தயாரித்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பவுள்ளார்.

    இதுகுறித்து புதுவை மாநில அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட கடிதத்தை தலைமை செயலாளர் அஸ்வினி குமார், கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பி வைப்பார். மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் என்பதால் கவர்னர் கிரண்பேடி கண்டிப்பாக நிதி விவகாரங்களில் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.

    இதன் மூலம் நிதி விவகாரத்தில் கவர்னர் இதுவரையில் இருந்து வந்த அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பதாகவே கருத வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #PuducherryGovernor #KiranBedi #GovernorKiranBedi
    Next Story
    ×