search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை நூற்றாண்டு நிறைவு விழா - எம்ஜிஆர் பொன்மொழி தொகுப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்
    X

    நாளை நூற்றாண்டு நிறைவு விழா - எம்ஜிஆர் பொன்மொழி தொகுப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்

    நாளை எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அவரின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார். #MGRCentenary #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவரது சாதனைகள், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிடப்பட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி 31 மாவட்டங்களில் மிக சிறப்பாக நடைபெற்றது.



    சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன்விழா நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 3.30 மணியளவில் சிறப்பாக நடைபெற உள்ளது.

    விழாவில், எம்.ஜி.ஆரின் உருவப் படத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட்டும், எம்.ஜி.ஆருடன் திரைத்துறையில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வசனகர்த்தா, உரையாடல் ஆசிரியர்கள், நடனக் கலைஞர்கள், படத்தொகுப்பாளர்கள், சண்டைப் பயிற்சியாளர், ஒப்பனைக் கலைஞர், புகைப்படக் கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரை கவுரவிக்கிறார்.

    எம்.ஜி.ஆர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் மற்றும் எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டும், தமிழ்நாடு பொன்விழா ஆண்டையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவித்து, காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை வகிக்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றுகிறார்.

    விழாவையொட்டி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் மக்களுக்கு ஆற்றிய சமூகத் தொண்டு, சீர்திருத்தங்கள், மக்கள் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சியும் தமிழ்நாடு அரசின் சாதனைகள், திட்டங்கள், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் 31 அரசு துறைகள் பங்கேற்கும் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவில் அமைச்சர்கள் துணை சபாநாயகர், அரசு தலைமை கொறடா, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசுச் செயலாளர் இரா.வெங்கடேசன் நன்றியுரை ஆற்றுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MGRCentenary #EdappadiPalaniswami

    Next Story
    ×