search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்து மெயின் அருவியில் போடப்பட்ட மணல் மூட்டையை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் அணைகள் நிரம்பியது. இதனால் கர்நாடகத்தில் இருந்து காவிரி உபரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டனர். இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடிக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்தது.

    பின்னர் படிப்படியாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,400 அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து மேலும் சரிந்து 6,500 கன அடியாக குறைந்தது. மெயின் அருவி தவிர மற்ற அருவிகளிலும், காவிரி ஆற்றில் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி, நாட்டறம்பாளையம் ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், மெயின் அருவி மற்றும் சினிபால்சில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மெயின் அருவியில் மணல் மூட்டைகள் போட்டு மராமத்து பணிகள் முடிந்த நிலையில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்குவதாக இருந்தது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்து மெயின் அருவியில் போடப்பட்ட மணல் மூட்டையை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனவே தொடர்ச்சியாக மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  #Hogenakkal



    Next Story
    ×