search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்துக்கான நிதிஒதுக்கீட்டை முழுமையாக வழங்க வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்
    X

    தமிழகத்துக்கான நிதிஒதுக்கீட்டை முழுமையாக வழங்க வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்

    முந்தைய நிதி குறைப்பை சீராய்வு செய்து தமிழகத்துக்கான நிதிஒதுக்கீட்டை முழுமையாக வழங்க வேண்டும் என்று இன்று நடைபெற்ற 15-வது நிதிக்குழுவில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். #Edappadipalaniswami #FinanceCommission
    சென்னை:

    தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று என்.கே.சிங் தலைமையிலான 15-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், நிதிக்குழு செயலாளர் அரவிந்த் மேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்மானம் சமீபத்திய நிதிக்குழுக்களால் குறைக்கப்பட்டுள்ளது. 14-வது நிதிக்குழுவினால் மத்திய வரிகளின் பங்கு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்ட போதிலும் அது தமிழ்நாட்டிற்கு உதவாமல் போனதற்குக் காரணம், மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு அதிகமாக குறைக்கப்பட்டதேயாகும்.

    14-வது நிதிக்குழு பரிந்துரைக்காலத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழ்நாட்டிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அது ஒட்டுமொத்த நிதிக்குழு பரிமாற்ற அமைப்பின் மீது தமிழ்நாட்டு மக்களின் மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


    2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதை நான் இங்கே வலியுறுத்துகிறேன்.

    மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப் படையில் நிதிப்பங்கீடு வழங்கவும் நான் நிதிக் குழுவை வேண்டுகிறேன். இக்குறியீட்டிற்கு மக்கள் தொகைக்கு வழங்கப்படும் அளவில் மதிப்பீடு அளித்து பரிந்துரைக்கப்பட வேண்டும். நிதிப்பங்கீட்டினைப் பொறுத்தமட்டில் 1971-ம் ஆண்டின் தரவுகளையே அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஊக்கத்தொகைகள் குறித்த குறிப்புகள் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு, 280-க்கு அப்பாற்பட்டது என்பதனை குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளோம்.

    ‘கவர்ச்சி’ திட்டங்களுக்கான செலவினங்களை கட்டுப்படுத்துதல் குறித்து ஆய்வு வரம்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக எங்களது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்கிறோம். கவர்ச்சி திட்டங்களுக்கும் மக்கள் நலத்திட்டத்திற்குமான இடைவெளி மிக மெல்லியதான ஒன்றாகும்.

    பள்ளிக் குழந்தைகளுக்கான ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்’ என்பது முந்தைய காலத்தில் ‘கவர்ச்சி திட்டம்’ என்று ஒரு சிலரால் அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தினை தனது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு அங்கமாக்கியுள்ளது.

    தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைக் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் வெவ்வேறு நிலையில் உள்ள மக்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தகையத் திட்டங்கள் யாவும் தகுதிவாய்ந்த மக்களை சென்றடையுமாறு உள்ளன. எனவே, அத்தகைய திட்டங்களை கவர்ச்சித் திட்டங்கள் என்று குறிப்பிட இயலாது. நிதிக்குழுவானது பல்வேறு மாநில சட்டமன்றங்களின் ஒட்டுமொத்த முடிவுகளை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று கருதுகிறேன்.

    முந்தைய நிதிக் குழுக்களின் சில பரிந்துரைகள் மிகவும் மோசமான பின் விளைவை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா மிக விரைவாக வளர வேண்டுமானால் தமிழ்நாடு போன்ற வளர்ந்துவரும் மாநிலங்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு நிதித் தேவைகள் அதிகமாக உள்ளன.

    மத்திய அரசு பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியை முழுமையாக மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை என்று இந்திய தலைமைக் கணக்காயர் முன்னரே குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய அளவு நிதியை மாநிலம் முன்பு இழந்துள்ளது. எனவே முந்தைய நிதிக் குழுக்களில் ஏற்பட்ட குறைபாடுகளை சீராய்வு செய்து நிதி பகிர்மானத்தில் ஏற்பட்டுள்ள குறைகளை சரி செய்யும் வகையில் அதற்கான நிதியினை உடனடியாக வழங்க 15-வது நிதிக் குழுவை நான் கேட்டுக் கொள்கிறேன்.

    நிலையான அரசு சொத்துக்களின் பராமரிப்புக்கு முக்கியத்துவம் வழங்கி பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்த நிதிக்குழுவை நான் வலியுறுத்துகிறேன்.

    சுமார் 8 கோடி தமிழ்நாட்டு மக்கள் இந்த நிதிக்குழுவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிறந்த 15-வது நிதிக்குழு தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #Edappadipalaniswami #FinanceCommission
    Next Story
    ×