search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலக்கோடு அருகே மினி சரக்கு ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    பாலக்கோடு அருகே மினி சரக்கு ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

    வண்டிக்கு கடன் தொகையை செலுத்தாததால் பைனான்ஸ் ஊழியர்கள் மினிஆட்டோவை பறிமுதல் செய்ததால் மனமுடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேலரஅள்ளி கொட்டபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிவண்ணன் (வயது 29). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஒரு மினி சரக்கு ஆட்டோவை சொந்தமாக வாங்கினார். அந்த ஆட்டோவில் சரக்குலோடுகளை ஏற்றி கொண்டு சென்று அதில் வரும் வருமானத்தை வைத்து கடந்த 9 மாதங்களாக பைனான்ஸ் நிறுவனத்திற்கு பணத்தை சரியாக கட்டி வந்தார்.

    இந்த நிலையில் சரியாக வேலை இல்லாததால் சரக்கு ஆட்டோவை ஓட்டாமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வருமானம் இல்லாமல் வண்டிக்கு கட்ட வேண்டிய கடன் தொகையை கடந்த 2 மாதங்களாக கட்டாமல் இருந்தார். கடந்த 2 மாதங்களாக பைனான்ஸ் ஊழியர்கள் பணத்தை கட்டாதது குறித்து மணிவண்ணனிடம் கேட்டனர். அதற்கு அவர் தற்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. 

    அப்போது அவர்கள் மணிவண்ணனிடம் பணம்  இல்லாமல் எதற்காக வண்டியை வாங்கினீர்கள்? என்று ஆவேசமாக பேசினர். பின்னர் பைனான்ஸ் ஊழியர்கள் மணிவண்ணன் வாங்கிய மினி சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. சரிவர வருமானம் இல்லாமல் அவதியுற்ற மணி வண்ணனுக்கு பைனான்ஸ் ஊழியர்கள் மினிசரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்த சம்பவம் மேலும் மனவருத்தத்தை அதிகரிக்க செய்தது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. 

    பெற்றோர்களும், நண்பர்களும் மணி வண்ணன் பணத்திற்காக யாரிடமாவது கேட்க சென்று இருப்பார் என்று நினைத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கொட்டப்பள்ளம் அருகே உள்ள ஒரு மாந்தோப்பில் மாமரத்தில் மணிவண்ணன் தூக்கில் பிணமாக கிடந்தார். 

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மணிவண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டிக்கு கடன் தொகையை செலுத்தாததால் பைனான்ஸ் ஊழியர்கள் மினிஆட்டோவை பறிமுதல் செய்ததால் மனமுடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×