என் மலர்
செய்திகள்

கரூருக்கு 7-ந்தேதி கவர்னர் வருகை- பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்
கரூருக்கு வருகிற 7-ந்தேதி வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். #GovernorBanwarilalPurohit
கரூர்:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தூய்மை பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கரூருக்கு வருகிற 7-ந்தேதி வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் வருகிற 7-ந் தேதி கரூர் ரெயில் நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவரை அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு , கரூர் அருகே தரகம்பட்டி பகுதியிலுள்ள இன்ப சேவா சங்கம் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் 50-வது ஆண்டு பொன் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் அன்று மதியம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அவர் தங்கி ஓய்வெடுக்கிறார். மேலும் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். அன்றைய தினம் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கவர்னர் வருகையையொட்டி கரூர் மாவட்ட போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. #GovernorBanwarilalPurohit
Next Story






