search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வாலாஜாவில் போலி வைத்தியர்கள் 2 பேர் கைது- பில்லி, சூனியம் இருப்பதாக பணம் பறிப்பு
    X

    வாலாஜாவில் போலி வைத்தியர்கள் 2 பேர் கைது- பில்லி, சூனியம் இருப்பதாக பணம் பறிப்பு

    வாலாஜாவில் வைத்தியர் என்று கூறிகொள்ளும் நபர்கள், பில்லி, சூனியம் வைத்திருப்பதாக சொல்லி, பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் வாலாஜா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ‘நாட்டு வைத்தியம்’ என்ற பெயரில் போலி வைத்தியர்கள் ஏராளமானோர் கிளினீக் வைத்து பொதுமக்களிடம் நூதனமுறையில் ஏமாற்றி பணம் மோசடி செய்வது அதிகரித்துள்ளது.

    வாலாஜா பஸ் நிலையம் சென்று இறங்கினாலே போதும் பயணிகள் சந்திக்கும் மிகப்பெரிய தொல்லையாக ஆட்டோக்காரர்கள், வைப்பு மருந்து புரோக்கர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். ‘‘இடுமருந்து என்று சொல்லப்படும் வைப்பு மருந்தை எடுக்க வேண்டுமா?

    நாட்டு வைத்தியர்களிடம் அழைத்துசெல்கிறோம்’’ வாருங்கள் என்றுகூறி நச்சரிப்பதை பார்க்க முடிகிறது. போலி வைத்தியர்களுக்கு ஆள்பிடித்து தரும் புரோக்கர் கும்பலே வாலாஜா பஸ் நிலையத்தை பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளன.

    இதனால், மற்ற தேவைக்களுக்காக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இடுமருந்து எடுக்க செல்பவர்கள் கண்ணில் பட்டால் போதும் கமி‌ஷன் பணத்திற்காக ஆசைப்பட்டு புரோக்கர்கள், போலி வைத்தியர்களிடம் கொண்டு போய் விட்டுவிடுகின்றனர்.

    வைத்தியர் என்று கூறிகொள்ளும் நபர்கள், பில்லி, சூனியம் வைத்திருப்பதாக சொல்லி, இல்லாத ஒரு நோய்க்கு வைத்தியம் செய்கின்றனர். வாலாஜாவில் கொடிகட்டி பறக்கும் இந்த தொழிலுக்கு அரசியல் பிரமுகர்களுடைய பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன்பு இடுப்பு முறிவுக்கு வாலாஜாவில் உள்ள ஒரு நாட்டு வைத்தியர் கொடுத்த மருந்தை சாப்பிட்ட ஒரு தொழிலாளியின் முகம் அகோரமாக மாறி உடல் உருகுலைந்தது. பாதிக்கப்பட்ட நபர் கலெக்டரிடம் புகார் அளித்தார்.

    அதுசம்பந்தமாக இதுவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை. இதேபோல் போலி வைத்தியர்கள் குறித்து பல்வேறு புகார்கள் சென்றாலும் போலீசார் கண்டுகொள்வதில்லை. நடவடிக்கை எடுப்பதும் இல்லை.

    ஓராண்டுக்கு முன்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் போலி வைத்தியம் பார்த்த கும்பலை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், போலி வைத்தியர்களை கைது செய்யாமல் விடுவித்தனர். போலி வைத்தியர்கள் அவ்வளவு செல்வாக்கு நிறைந்தவர்களா? என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியவில்லை.

    இந்த நிலையில் புதியதாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரிடம் இந்த போலி வைத்தியர்கள் பற்றி நகரில் பல்வேறு தரப்பினர் புகார் செய்தனர். அதன்பேரில் அவர் நடத்திய சோதனையில் போலி வைத்தியர்களான ஒத்தவாடை தெருவை சேர்ந்த ரமேஷ் (44), பாஸ்கர் (40) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல், வாலாஜாவில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி போலி வைத்தியர்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×