search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லணை கால்வாயில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடலை மீட்கக்கோரி உறவினர்கள் திடீர் மறியல்
    X

    கல்லணை கால்வாயில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடலை மீட்கக்கோரி உறவினர்கள் திடீர் மறியல்

    தஞ்சை அருகே கல்லணை கால்வாயில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடலை மீட்கக்கோரி உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் கல்லணை கால்வாயில் வில்வராயன்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவன் சிவாஜி(வயது 11) மற்றும் அவனது அண்ணன் சிவா (14) மற்றும் ஆனந்தராமன் ஆகியோர் நேற்று மாலை குளிக்க சென்றனர்.

    அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மாணவன் சிவாஜி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதில் சிவா(14) மற்றும ஆனந்த ராமன் ஆகியோர் தப்பித்தனர்.

    இது குறித்த தகவலின் பேரில் நேற்று மாலை திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறையினர் வந்து தேடினர். ஆனால் மாணவன் சிவாஜியை மீட்க இயலவில்லை. மேலும் இரவு நேரம் ஆனதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இதற்கிடையே நேற்று கல்லணை கால்வாயில் தண்ணீர் குறைவாக வந்து கொண்டிருந்தது. இன்று காலை முதல் அதிக அளவில் தண்ணீர் வருகிறது. இதனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிவாஜியின் உடலை தேடும் பணி பாதிக்கும் என்பதை அறிந்த அவருடைய தந்தை மோகன், தாய் உமா மற்றும் உறவினர்கள் பூதலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரில் திருக்காட்டுப்பள்ளி -செங்கிப்பட்டி சாலையில் அமாந்து இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் திருக்காட்டுப்பள்ளி-செங்கிப்பட்டி இடையே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கால்வாயில் முழுவதும் தண்ணீரை நிறுத்தி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிவாஜியின் உடலை மீட்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

    இதுப்பற்றி தகவல் அறிந்ததும் பூதலூர் போலீசார் சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். அப்போது பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் பேசி தண்ணீரை நிறுத்தி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிவாஜின் உடல் தேடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இன்று மாலை 4 மணிக்குள் சிவாஜியின் உடல் தேடி தராவிட்டால் மீண்டும் சாலை மறியல் செய்வோம் என்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×