search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினியின் புதிய கட்சி அக்டோபரில் தொடக்கம்?
    X

    ரஜினியின் புதிய கட்சி அக்டோபரில் தொடக்கம்?

    ரஜினி தனது கட்சி நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கிய விதிகள் அடங்கிய புத்தகம் வெளியாகி இருப்பது விரைவில் அவர் தனிக்கட்சி தொடங்க இருப்பதை உறுதிபடுத்தி உள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலுக்கு வருவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார்.

    கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் வகையில் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

    ரஜினி மக்கள் மன்றத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கடந்த சில தினங்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    இந்நிலையில் ரஜினி தனது கட்சி நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் வழங்கிய விதிகள் அடங்கிய 36 பக்க புத்தகம் வெளியானது. ஆகஸ்டு முதல் வாரத்தில் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட இந்த புத்தகம் இந்த வாரம் தான் உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது.

    ரஜினி மக்கள் மன்ற விதிகளில் முக்கியமானவை:-

    நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். பொது மக்கள் குறிப்பாக பெண்கள், முதியோர்கள் இடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். மன்ற கொடிக்கு துணியால் செய்த கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலிமாசு குறித்த அரசின் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கூம்பு வடிவக் குழாய் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்துதல் கூடாது. ஒலி பெருக்கிப் பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    நிகழ்ச்சிகள் சிக்கனமாகவும் ஆடம்பரம் இன்றியும் நடத்தப்பட வேண்டும். எந்த மன்றக் கூட்டங்களிலும் சால்வைகள் மாலைகள் பூங்கொத்துகள் பரிசு பொருட்கள் பகிர்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    நிகழ்ச்சி முடிந்த உடனேயே பேனர்கள், தோரணங்கள், பிற விளம்பரப் பதாகைகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகி இதனை உறுதி செய்ய வேண்டும். கூட்டம் முடிந்த பிறகு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டே ஒப்படைக்க வேண்டும்.

    தலைமையின் அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பரப்பதாகைகள் அரசின் உரிய அனுமதி பெற்றே வைக்க வேண்டும். பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் அமைத்தல் வேண்டும்.

    நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சமூக வலைதளங்களில் கவனமாக கருத்துகளை பதிவிட வேண்டும். நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்கலாமே தவிர தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது. ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணியில் திருநங்கைகளும் எவ்வித பாகுபாடின்றி சேரலாம். நிர்வாக பொறுப்புக்களையும் வகிக்கலாம். மன்ற நிர்வாகிகளை மதித்து நடக்க வேண்டும்.

    நிர்வாகிகளின் நடவடிக்கைகளில் குறை ஏதேனும் இருந்தால் மன்ற உள்கூட்டங்களில் அதைப்பற்றி விவாதிக்க வேண்டுமேயன்றி பொதுவில் ஒருபோதும் எந்த விமர்சனமும் செய்யக்கூடாது.



    விவசாய அணியின் குறிக்கோளாக ‘தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான விவசாயத்தை கேள்விக்குறியாக்கி உள்ள பாசன நீர் பற்றாக்குறையை போக்க நதிகள் இணைப்பு, தமிழக ஆறுகள் இணைப்பு, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். மேற்கண்டவாறு கட்டுப்பாட்டில் கூறப்பட்டு உள்ளது.

    இதுபோலவே மீனவர் அணி, வழக்கறிஞர் அணி, வணிக அணி, மருத்துவர் அணி, நெசவாளர் அணி, தொழில்நுட்ப அணி என்று அணிகளை பிரித்து அவர்களுக்கு கொள்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

    ரஜினியின் இந்த விதிகள் புத்தகத்துக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது திட்டமிடலை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

    ரஜினியின் இந்த புதிய விதிகள் பற்றி நிர்வாகிகள் கூறியதாவது:-

    ரஜினி கட்சி அறிவிப்பு வெளியிட்ட உடனே அவரது கொள்கை என்ன என்று கேட்டு கிண்டல் செய்தார்கள். இப்போது இந்த விதிகள் புத்தகத்தின் மூலம் அவர்களுக்கு பதில் கூறிவிட்டார்.

    கொள்கையை விட கட்சிக்கு கட்டுப்பாடு முக்கியம் என்பதால் தான் மாற்றத்தை எங்களிடம் இருந்தே தொடங்கி இருக்கிறார். ரஜினியின் அரசியலில் வேகமும் விவேகமும் இருக்கிறது என்பதன் வெளிப்பாடே இந்த விதிகள். கட்சி கொள்கைகள் தனியாக புத்தகமாக வெளியிடப்படும்.

    விரைவில் தனிக்கட்சி தொடங்க இருப்பதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. அக்டோபரில் கட்சியை தொடங்கி நவம்பரில் மாநாடு நடத்த ஒரு திட்டம் இருக்கிறது.

    பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு இரண்டையும் வைத்து தேதியில் மாற்றம் வரலாம். ஆனால் இன்னும் 3 மாதத்துக்குள் ரஜினி கட்சி தொடங்குவது உறுதி. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதும் உறுதி’ என்றார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram

    Next Story
    ×