search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைத்தால் கேரளாவுக்குதான் ஆபத்து - விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஆவேசம்
    X

    பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைத்தால் கேரளாவுக்குதான் ஆபத்து - விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஆவேசம்

    பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைத்தால் கேரளாவுக்குதான் ஆபத்து என்று விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். #MullaPeriyar #Farmers

    கம்பம்:

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தேக்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 15-ந் தேதி அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரி நீர் இடுக்கி அணைக்கு திருப்பி விடப்பட்டது.

    பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாகத்தான் இடுக்கி அணையில் நீர் மட்டம் உயர்ந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என கேரள அரசு மத்திய துணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்கும் பிரச்சினையில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாடை கொண்டிருப்பதாகவும், எனவே அணையின் நீர் மட்டத்தை குறைக்க விட மாட்டோம் எனவும் தெரிவித்தனர். மேலும் நீர் மட்டத்தை குறைத்தால் கேரளாவுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

    இது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறிய கருத்துக்கள் விபரம்:-

    அப்பாஸ் (5 மாவட்ட பெரியாறு, வைகை அணை பாசன விவசாயிகள் சங்க தலைவர்):-


     

    கேரளாவில் 82 அணைகள் உள்ளன. ஆனால் இந்த அணைகளில் தண்ணீர் நிரம்பினால் அதனை தடுத்து நிறுத்தக்கூடிய வகையில் எங்கும் தடுப்பணைகள் கட்டப்படவில்லை. பெரியாறு அணை பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் கேரள அரசு வைத்த அனைத்து வாதங்களையும் பொய்யாக்கும் வகையில் அணை பலமாக இருக்கிறது என்று உறுதி செய்தபிறகுதான் 142 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதி அளித்தது. பெரியாறு அணைக்கு கேரளாவில் உள்ள ஹெவி, பிளச்சிங், ஆண்டோரி, சபரிகிரி, பாம்பனாறு, கள்ளாறு, ஆணையிரங்கல் உள்ளிட்ட பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் வந்தது. கேரள அரசு இந்த வழித்தடத்தை மாற்றி இந்த தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணையில் சேரும் வகையில் மாற்றி விட்டது.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டிய பிறகு அங்கிருந்து 20 ஆயிரம கன அடி தண்ணீர் மட்டுமே இடுக்கி அணைக்கு திருப்பி விடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதால் செருதோணி வழியாக 1 லட்சத்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் எர்ணாகுளம், கொச்சி, ஏரியமங்கலம் ஆகிய பகுதிகளை சூழ்ந்ததால் வெள்ள பாதிப்பு அதிகரித்தது. பெரியாறு அணையில் 1 அடி நீர் மட்டம் உயர்ந்தால் 25.5 சதுர கி.மீ பரப்பளவில் தான் தண்ணீர் உயரும். ஆனால் இடுக்கி அணையில் 1 அடி நீர் மட்டம் உயர்ந்தால் 75 சதுர கி.மீ பரப்பளவுக்கு தண்ணீர் உயரும். பெரியாறு அணையின் நீர மட்டத்தை 139 அடியாக குறைத்தால் அந்த தண்ணீர் முழுவதும் இடுக்கி அணைக்குதான் செல்லும். இதனால் கேரள மக்களுக்குதான் பாதிப்பு ஏற்படும்.

    கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் தமிழகத்தில் இருந்துதான் கோடிக்கணக்கான அளவில் பொதுமக்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் வெள்ளம் பாதித்த பகுதிக்கு சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர். படித்த மக்கள் அதிகம் உள்ள கேரளாவில் மக்களிடம் வி‌ஷம பிரசாரத்தை தூண்டும் வகையில் அரசியல் வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் உள்ள காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்களே இது குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளனர். அணைகள் உள்ள பகுதிகளில் நீர் வெளியேறினால் என்ன தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசு எடுக்காததால்தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

    செங்குட்டுவன் (தமிழக அனைத்து விவசாய சங்க மாநில துணைச் செயலாளர்):-


     

    முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைக்க நினைப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா அவமதிக்கும் செயலாகும். அணை பலமாக உள்ளது என்று கூறிதான் உச்சநீதிமன்றம் 142 அடி வரை தண்ணீரை தேக்கலாம் என அனுமதித்து உள்ளது. அதோடு 152 அடி வரை தண்ணீரை வைத்துக் கொள்ளலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.

    கேரளாவில் உள்ள 82 அணைகள் 8-ந் தேதி திறக்கப்பட்டதால்தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு ஆகஸ்டு 15-ந் தேதிதான் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. கேரள அரசு ஆகஸ்ட் 8-ந் தேதியே அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீரை திறந்து விட்டதால்தான் 15 மாவட்டங்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

    பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கேரள வாசிகள் ஏராளமானோர் ஆக்கிரமிப்பு விடுதிகள், கடைகள் கட்டியுள்ளனர். ஏற்கனவே 2 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு தாரை வார்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6500 ஏக்கரை ஆக்கிரமிக்கவே கேரள அரசு இது போன்ற சூழ்ச்சியை செய்கிறது. பேபி அணையை பலப்படுத்த கோரியும், 152 அடி வரை தண்ணீர் உயர்த்த கோரியும் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து குறைத்தால் தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். #MullaPeriyar #Farmers

    Next Story
    ×