என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லாபுரத்தில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து - ரூ.50 லட்சம்  மதிப்பிலான பொருட்கள் நாசம்
    X

    வில்லாபுரத்தில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து - ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

    மதுரை வில்லாபுரத்தில் பர்னிச்சர் கடை உள்பட 3 கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
    அவனியாபுரம்:

    மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் கோமாதா தெருவில் விஜயன் என்பவர் பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். இதன் அருகிலேயே அடுத்தடுத்து எலக்ட்ரிக்கல் கடை, கவரிங் நகை தயாரிக்கும் கம்பெனி ஆகியவை உள்ளது.

    இன்று காலை 7 மணியளவில் கவரிங் கடையில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியானது. இதைப்பார்த்த அந்தப் பகுதி மக்கள் உடனே போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் கவரிங் கடையில் பற்றிய தீ அருகில் உள்ள பர்னிச்சர் கடை, எலக்ட்ரிக்கல் கடையிலும் பரவியது.

    பர்னிச்சர் கடையில் மரச்சாமான்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர தீவிர முயற்சிக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்த விபத்தில் பர்னிச்சர் கடை, எலக்ட்ரிக்கல் கடை உள்பட 3 கடைகளில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

    தீ விபத்து குறித்து அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காலையில் நடந்த தீ விபத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
    Next Story
    ×