search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு - சேலத்தில் இளைஞர்கள் திரண்டனர்
    X

    ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு - சேலத்தில் இளைஞர்கள் திரண்டனர்

    சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று தொடங்கியது.
    சேலம்:

    சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாம் வருகிற செப்டம்பர் மாதம் 2-ந்தேதி முடிவடைகிறது.

    முகாமில் சேலம், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

    முதல் நாளான இன்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று நள்ளிரவில் இருந்து தேர்வு தொடங்கியது.

    முதலில் மைதான நுழைவு வாயில் முன்பு வைத்து இளைஞர்கள் உயரம் சரி பார்க்கப்பட்டது. இதில் உயரம் குறைவாக இருப்பவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சரியான உயரம் உள்ளவர்கள் மட்டும் முகாமிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மார்பு அளவு சரிப்பார்க்கப்பட்டது.

    பின்னர் கல்வி அடிப்படையில் டெக்னீக்கல், டெக்னீக்கல் அம்யூசன், ஏவியேசன், நர்சிங் அசிஸ்டன்ட், ஜெனரல் டியூட்டி, கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் ஆகிய பதவிகளுக்கு ஆன்லைனின் விண்ணப்பித்தவர்கள் தனித் தனியாக பிரிக்கப்பட்டனர்.

    ஒவ்வொரு பதவிகளுக்கும் இளைஞர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு முகாமில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். அவர்களின் கல்விச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவை சரிபார்த்தனர். இந்த பணியில் ராணுவ அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளும் மற்றும் பல்வேறுதுறை அரசு அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

    தகுதியான இளைஞர்கள் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். அதன் பிறகு கயிறு ஏறுதல் என ஒவ்வொரு உடற்தகுதி தேர்வுகளாக நடைபெற்றது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு நடைபெறும்.

    முகாமில் கலந்து கொள்ள 11 மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மைதானத்தின் வெளியே திரண்டனர். பெரும்பாலான இளைஞர்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். அவர்கள் சாலையின் ஓரத்திலும், மைதானத்தின் வெளியே, மதில் சுவர் ஓரமாக இரவு தூங்கினார்கள். சிலர் பெரியார் மேம்பாலத்தின் அடியிலும் படுத்து தூங்கினார்கள். அவர்கள் கடும் குளிராலும், கொசுக் கடியாலும் அவதிப்பட்டனர். உணவுக்கும் சிரமப்பட்டனர். இரவு நேரத்தில் கடைகளை தேடி அலைந்தார்கள். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து வேதனை அடைந்தனர்.

    தேர்வில் பங்கேற்க வந்துள்ள இளைஞர்கள் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மண்டபம் ஏதாவது ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கலாம் என்று புலம்பியபடி சென்றனர். தேர்வு நள்ளிரவு 12 மணிக்கு பிறகு தொடங்கியதால் தூக்க கலக்கத்தில் சோர்வுடன் இளைஞர்கள் காணப்பட்டனர்.

    சேலம் மகாத்மா காந்தி மைதானம் பெரிய மைதானம் மட்டுமல்லாமல், மரங்கள் சூழ்ந்து, காற்றோற்றத்துடன், சுற்றிலும் மதில் சுவருடன் பாதுகாப்பாக உள்ள மைதானமாகும். எனவே, காலை 6.30 மணிக்கு பிறகு தேர்வை வைத்திருக்கலாம் என பொதுமக்கள் மற்றும் தேர்வில் பங்கேற்க வந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×