என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மேட்டூர் ரோடு வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்
    X

    ஈரோடு மேட்டூர் ரோடு வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

    ஈரோடு மேட்டூர் ரோடு வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மேட்டூர் ரோடு நகரின் முக்கிய ரோடு ஆகும். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரோடு வழியாக செல்லும். இதனால் எப்போதும் மேட்டூர் ரோடு பரபரப்பாகவும், போக்கு வரத்து நெரிசலாகவும் இருக்கும்.

    இந்த நிலையில் மேட்டூர் ரோட்டில் கடந்த 1½ மாதமாக பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இதனால் ரோடு தோண்டப்பட்டு கிட்டத்தட்ட பணிகளும் முடிந்து விட்டது.

    ஆனால் ரோடு போடப்படாமல் ஆங்காங்கே மணல் திட்டு திட்டாக உள்ளது. இதனால் அடிக்கும் காற்றில் அந்த புழுதி மணல் பறந்து மேட்டூர் ரோட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் மணல் படிந்துள்ளது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதோடு கடைகளுக்கு வரும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று மேட்டூர் ரோடு கடை வியாபாரிகள் சுமார் 300 பேர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடை முன் நடுரோட்டில் நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மேட்டூர் ரோட்டில் ரோடு போட வேண்டும் என்று கோரி இந்த சாலை மறியல் நடந்தது.

    வியாபாரிகளின் சாலை மறியலால் மேட்டூர் ரோட்டில் திடீர் பரபரப்பும் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது. இரு புறமும் வாகனங்கள் அணி வகுத்து நினறன.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்தனர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போக்கு வரத்து டி.எஸ்.பி. எட்டியப்பனும் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஓரமாக நில்லுங்கள் என்று கூறியதை தொடர்ந்து வியாபாரிகள் ரோட்டில் ஓரமாக நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ‘‘இன்னும் ஒரு வாரத்துக்குள் ரோடு போடப்படும்’’ என உறுதி அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து வியாபாரிகள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். வியாபாரிகளின் இந்த மறியலால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×