search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

    கர்நாடகாவில் மழை தீவிரம் குறைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் குறைக்கப்பட்டுள்ளது. #KarnatakaRains #cauverywater
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து 2.26 லட்சம் கன அடி வரை காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணையும் நிரம்பி, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இதனால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் 16 கண் பாலம் மதகு வழியாக 2 லட்சத்து 5 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    மேட்டூர் அணையின் 84 ஆண்டு கால வரலாற்றில் 3-வது முறையாக நேற்று 2 லட்சத்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த சூழ்நிலையில் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில் மழை சற்று தணிந்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.


    கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பு நேற்று 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை மேலும் குறைக்கப்பட்டு கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீரும், மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து குறையத்தொடங்கி உள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக 1 லட்சத்து 75 ஆயிரம் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. நேற்று 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இருந்தாலும் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று 42-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது 1.80 லட்சம் கன அடியாக குறைந்தது.

    அணையில் இருந்து நேற்று காலை 2 லட்சத்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை இது 1.80 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் வரத்தைவிட கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் ஒருவாரத்திற்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 119.53 அடியாக குறைந்தது.

    கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளதால் நாளை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    இதனால் காவிரி ஆற்றில் தற்போது பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் படிப்படியாக சீராகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. #KarnatakaRains #cauverywater
    Next Story
    ×