search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் கரைபுரளும் வெள்ளம்: விவசாயிகள், பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
    X

    காவிரியில் கரைபுரளும் வெள்ளம்: விவசாயிகள், பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    காவிரியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியில் கரைபுரண்டு வரும் தண்ணீரை ஆங்காங்கே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
    திருச்சி:

    கர்நாடாக மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக திகழும் மேட்டூர் அணை கடந்த 23-ந்தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. அணையில் இருந்து சுமார் 75 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை வழியாக நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை வழியாக பவானி, ஈரோடு கருங்கல் பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி சென்றடைந்தது.

    பின்னர் பரமத்திவேலூர் வழியாக சென்று கரூர் அருகேயுள்ள மேட்டுக்கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகே ஸ்ரீராமசமுத்திரம், மாயனூர், முசிறி, குளித்தலை, வாத்தலை, முக்கொம்பு (காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது), ஜீயபுரம், முத்தரசநல்லூர், கம்பரசம் பேட்டை (தடுப்பணை) வழியாக காவிரி ஆற்றில் பாய்கிறது.

    அங்கிருந்து அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் வழியாக கல்லணையை சென்றடைகிறது. கல்லணையில் காவிரி ஆறு நான்காக பிரிகிறது. அதாவது கல்லணை கால்வாய், காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் என பிரிந்து பரந்து விரிந்து செல்கிறது. தொடர்ந்து பல்வேறு கிளை வாய்க்கால்களில் பாயும் காவிரி ஆறு இறுதியில் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது.

    தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை ஆகும்.

    கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததாலும், காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. முப்போகம் விளைவித்த டெல்டாவில் ஒருபோக சாகுபடி கூட செய்ய முடியாமல் தவித்த விவசாயிகள் வாழ்வாதாரம் பாதித்து தற்கொலையும் செய்து கொண்டனர்.

    அவ்வாறான சூழலில் தற்போது காவிரியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியில் கரைபுரண்டு வரும் தண்ணீரை ஆங்காங்கே விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மலர்கள் தூவியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

    ஆடிப்பெருக்கு வருகிற 3-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போதே காவிரி ஆற்றில் ஏராளமானோர் திரண்டு வந்து காவிரி தாய்க்கு பூஜை பொருட்களை வைத்து ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தி வரவேற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரளும் வெள்ள நீரால் கரையோரத்தில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் செல்லும் தண்ணீர் நேராக கடலில் சென்று கலக்கிறது. கடந்த சில தினங்களாக கொள்ளிடத்தில் திறக்கப்படும் 40 ஆயிரம் கனஅடிக்கும் மேலான தண்ணீரால் தினமும் கடலில் 5 டி. எம்.சி. தண்ணீர் வரை கலந்து வருகிறது.

    கடந்த 22-ந்தேதி தஞ்சை மாவட்டம் கல்லணையை காவிரி தண்ணீர் அடைந்ததும் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    அந்த தண்ணீர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தை சென்றடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி ஆகிய 4 தாலுகா பகுதிகளிலும் காவிரி நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு இன்று காலை 8 மணியளவில் காவிரி தண்ணீர் வந்தது. நாகுடியை அடுத்த இடையன் கொல்லை நீர்த்தேக்கத்திற்கு கல்லணை கால்வாயில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரைபுரண்டு வந்தது. அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகள் மலர்கள் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

    இந்த தண்ணீர் மூலம் 160 ஏரிகள் நிறைந்து சுமார் 28 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். எனவே இந்த ஆண்டு தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி வரை இப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் பல ஆண்டுகளுக்கு பிறகு முப்போகம் சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் கலந்து அரியலூர் மாவட்டம் திருமானூர், தா.பழுர் வழியாக ஜெயங்கொண்டம் அருகேயுள்ள அணைக்கரை கீழணையை சென்றடைந்தது. அணைக்கரை கொள்ளிடம் ஆற்று கரையோரங்களில் ஏராளமானோர் குடிசை வீடுகள் அமைத்து தங்கியுள்ளனர். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் குடிசை வீடுகள் மற்றும் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக்கரை கீழணையில் இருந்து உடனடியாக தண்ணீரை திறந்து விட்டனர். அணைக்கரை கீழ ணையில் தண்ணீர் நிரம்பியதும், அமைச்சர் மற்றும் அரியலூர், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சை மாவட்ட கலெக்டர்கள் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட இருந்தனர். ஆனால் வெள்ள அபாயம் ஏற்பட்டதால், நேற்றிரவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுமார் 30ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டனர்.

    அங்கிருந்து வடவாறு வாய்க்கால், வடக்கு ராஜன் கால்வாய், தெற்கு ராஜன் கால்வாய் ஆகிய வாய்க்கால்களில் 400, 300 மற்றும் 1500கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கரை கீழணையில் இருந்து வடவாற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலூர், காட்டு மன்னார்கோவில் வழியாக சென்னை வீராணம் ஏரியை சென்றடைகிறது.

    அணைக்கரை கீழணை தண்ணீர் மூலம் கடலூர், நாகை மாவட்டத்தில் சுமார் 67 ஆயிரத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதும் தண்ணீர் எப்போதும் வரும் என்று கடலூர், நாகை மாவட்ட விவசாயிகள் காத்திருந்தனர். அணைக்கரைக்கு தண்ணீர் வந்ததும் அதன்பிறகு விவசாய பணிகளை தொடங்க இருந்தனர்.

    இந்தநிலையில் விவசாயிகள் யாரும் எதிர்பாராத வகையில் நேற்றிரவே அணைக்கரை கீழணையில் முழுவதும் தண்ணீர் நிரம்பி, அங்கிருந்து வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை இன்று காலைதான் விவசாயிகள் அறிந்தனர். இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

    மேலும் உடனடியாக விவசாய பணிகளையும் தொடங்கினர். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சம்பா சாகுபடிக்கு மிகவும் கைக்கொடுக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×