என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே மண்ணில் புதைந்து கிடந்த பெருமாள் சிலை கண்டுபிடிப்பு
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மைவயல் கிராமத்தில் காளிதாஸ் என்பவருக்கு சொந்தமான திடல் உள்ளது. இந்த திடலில் சாகுபடி சமயத்தில், காளிதாஸ் வயல்களுக்கு வேலை பார்க்க வரும் வேலை ஆட்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்ப்பது வழக்கம்.
சமீபகாலமாக இயந்திரம் மூலம் சாகுபடி செய்வதால், வேலை ஆள்களின் தேவை குறைந்து விட்டது. இதனால் அந்த திடல் பயன்பாடுஇல்லாமல் புதர் மண்டிக் கிடந்தது. இந்த நிலையில் அந்த இடத்தின் உரிமையாளர் காளிதாஸ் ஜேசிபி இயந்திரம் மூலம் புதர்களை அகற்றி சீரமைத்தார்.
சீரமைக்கப்பட்ட இடத்தில் நேற்று காலை சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ஜேசிபி இயந்திரம் தோண்டி வைத்திருந்த மணல் குவியலில் சுமார் முக்கால் அடி உயரமுள்ள, சங்கு, சக்கரங்களை இருகைகளில் ஏந்தியபடி, பெருமாள் அமர்ந்திருக்கும் உலோகத்திலான சிலை கிடந்தது. சிறுவர்கள் இதுகுறித்து பெரியர்வர்களிடம் தெரிவித்தனர்.
இதுதொடர்பான இடத்தின் உரிமையாளர் காளிதாஸ், அறந்தாங்கி தாசில் தாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெருமாள் சிலையை மீட்டனர். மேலும் சிலை ஐம்பொன் சிலையாக என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
அறந்தாங்கி அருகே மண்ணில் புதையுண்டு கிடந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.