search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவு - தமிழக அரசு தகவல்
    X

    ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவு - தமிழக அரசு தகவல்

    ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. #OPSAssets
    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    தமிழக துணை முதல் அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், கடந்த 1996ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தலைவர், எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்அமைச்சர் என்று பதவிகளை வகித்து பொது ஊழியராக இருந்து வருகிறார்.

    மனைவி பி.விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு, தன் சகோதரர்கள் ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தொழில் பங்குதாரர்கள், பினாமிகள் ஆகியோரது பெயர்களிலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். ஆனால், 2016ம் ஆண்டு தேர்தலின் போது, வருமானத்தை குறைத்து காட்டியுள்ளார்.

    பெரியகுளத்தில் தனக்குள்ள விவசாய நிலங்களையும், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டின் சொத்து மதிப்புகளையும் மறைத்துள்ளார். வருமானமே இல்லாத குடும்ப தலைவியான தனது மனைவி விஜயலட்சுமிக்கு ரூ. 78 லட்சத்துக்கு சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதவிர, பினாமிகளின் பெயரிலும் மாந்தோப்பு உள்ளிட்ட ஏராளமான சொத்துக்களை வாங்கியுள்ளார்.

    அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் ரூ. 200 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

    அவரது மகன்கள் பல நிறுவனங்களில் இயக்குனர்களாக உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் 2வது மகன் வி.ஜெயபிரதீப் 3 மிகப் பெரிய நிறுவனங்களின் இயக்குனராக பதவி ஏற்கும்போது, அவருக்கு 25 வயது கூட ஆகவில்லை. சின்ன வயதில், பல கோடி ரூபாய் முதலீடுகளை அவரால் எப்படி செய்ய முடிந்தது?



    சேகர்ரெட்டியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்த டைரியில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.4 கோடி கொடுத்ததாக குறிப்புகள் உள்ளது.

    எனவே, ஓ.பன்னீர்செல்வம், தன் மனைவி, மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பினாமிகள் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக சேர்த்துள்ளார்.

    இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் 10ந்தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநில தலைமை குற்றவியல் வக்கீல் எமலியாஸ் ஆஜராகி, ‘மனுதாரர் புகாரை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்’ என்று கூறினார்.

    அதற்கு நீதிபதி, ‘புகார் மார்ச் மாதமே கொடுக்கப்பட்டு விட்டது. இதுநாள் வரை போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வம் பெயர் உள்ளது என்று புகார்தாரர் கூறியுள்ளார். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றினால் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

    அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணி சங்கர், ‘இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்றார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் குறித்தும், அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்’ என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி, இந்த புகார் மீதான விசாரணையை கூடிய வரை விரைவாக முடிக்க வேண் டும். அப்போது மனுதாரர் கூறும் குற்றச்சாட்டையும், அதற்கான ஆதாரங்களையும் போலீசார் பெற்று அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும்.

    ஒருவேளை போலீசார் புலன் விசாரணையில் காலதாமதம் செய்வதாக மனுதாரர் கருதினால், அவர் எப்போது வேண்டுமானாலும், இந்த ஐகோர்ட்டை அணுகலாம்’ என்று கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.  #OPSAssets
    Next Story
    ×