search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்த கோட்டை நோக்கி செல்ல முயற்சி - 1,500 ஆசிரியர்கள் கைது
    X

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்த கோட்டை நோக்கி செல்ல முயற்சி - 1,500 ஆசிரியர்கள் கைது

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முன்பு மறியல் போராட்டம் நடத்த முயன்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். #Teachers #Arrest
    சென்னை:

    மத்திய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோட்டை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி நேற்று காலை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் அ.சுதாகரன் தலைமையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள் மறியல் போராட்டம் நடத்துவதற்காக கோட்டை நோக்கி பேரணியாக செல்ல தயாராகினர்.

    ஆனால் போலீசார் அவர்களை சேப்பாக்கம் அருகிலேயே தடுத்து நிறுத்தினார்கள். இருப்பினும், கோஷங்களை எழுப்பியபடி கோட்டையை நோக்கி செல்ல அவர்கள் முயன்றனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பெண்கள் உள்பட 1,500 ஆசிரியர்களை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளரை சந்தித்து பேசுவதற்காக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளான அ.சுதாகரன், கதிரவன், ந.ரெங்கராஜன், அய்யப்பன், சுப்புராஜ் ஆகிய 5 பேரை போலீசார் அழைத்து சென்றனர்.

    அவர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம், தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் பின்னர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் நடந்த சந்திப்பு சுமுகமாக இருந்தது. எங்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார். ஊதிய பிரச்சினை தொடர்பாக சாதகமான முடிவு ஏற்படும் என்றும், சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரத்தை தலைமை ஆசிரியர்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் திட்டத்தை ரத்து செய்வதாகவும், பயோ மெட்ரிக் வருகை பதிவு எங்களுக்கு கிடையாது என்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளார் தெரிவித்தார். அதே சமயம் புதிய ஓய்வூதிய திட்டம் என்பது அரசின் முடிவு என்பதால் அவர் அதுபற்றி எதுவும் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×