search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரிங் படிப்புக்கும் அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு - தொழில்நுட்ப கவுன்சில் துணை தலைவர் தகவல்
    X

    என்ஜினீயரிங் படிப்புக்கும் அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு - தொழில்நுட்ப கவுன்சில் துணை தலைவர் தகவல்

    மருத்துவ மாணவர் சேர்க்கையை போல் என்ஜினீயரிங் படிப்புக்கும் அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய தொழில்நுட்ப கவுன்சில் துணை தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார். #Engineering #NEET
    சென்னை:

    தமிழ்நாட்டில் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரிகளில் பிளஸ்-2 மார்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வு மார்க் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று கூறி நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது.

    ஆனால் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நீட்தேர்வு கட்டாய நடைமுறைக்கு வந்தது. இந்த ஆண்டும் அதே நடைமுறையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கையையும் அகில இந்திய நீட் தேர்வு அடிப்படையில் நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

    இந்த தகவலை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார். சென்னையில் சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிலைய பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்.பி. பூனியா இந்த தகவலை வெளியிட்டார்.


    அவர் கூறும்போது, மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் நீட் தேர்வு போலவே என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு நடத்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே 2019 கல்வியாண்டு முதல் என்ஜினீயரிங் படிப்புக்கும் நீட் தேர்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

    தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி நீட் தேர்வையே இப்போதும் கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கும் நிலையில் என்ஜினீயரிங் கல்லூரிக்கும் நீட்தேர்வு வரும் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    எனவே தமிழ்நாட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Engineering #NEET
    Next Story
    ×