search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள் ஸ்டிரைக் 2வது நாளாக நீடிப்பு - தமிழகத்தில் ரூ.600 கோடி இழப்பு
    X

    லாரிகள் ஸ்டிரைக் 2வது நாளாக நீடிப்பு - தமிழகத்தில் ரூ.600 கோடி இழப்பு

    லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக ரூ.600 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. #LorryStrike
    சென்னை:

    டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நேற்று நாடு முழுவதும் லாரி ‘ஸ்டிரைக்’ தொடங்கியது.

    லாரி ‘ஸ்டிரைக்’இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக நீடிக்கிறது. இந்தியா முழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடவில்லை.

    தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் ஓடாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஸ்டிரைக் காரணமாக நாடு முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. தமிழகத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கி கிடக்கிறது.



    நாமக்கல் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 2.5 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு முதல் 2 நாட்கள் நாங்கள் ஆதரவு அளித்து உள்ளோம். இதனால் நாமக்கல் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2.5 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன. இந்த எண்ணிக்கை இன்று காலை 5 கோடியாக உயர்ந்துள்ளது.

    நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2.5 கோடி முட்டைகளை சேமிக்கும் அளவுக்கு குளிர்பதன கிடங்குகள் உள்ளன. எனவே முட்டைகளை இன்று இரவு முதல் வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

    முட்டை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர தொடங்கி உள்ளது. இன்று முட்டை விலை 5 காசு அதிகரித்துள்ளது.

    எனவே பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனமாக கருதி முட்டை லாரிகளுக்கு போராட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களாக வட மாநிலங்களில் இருந்து 70 சதவீத லாரிகள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. இன்று முதல் லாரிகள் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் கோழித்தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    போராட்டம் குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

    ஸ்டிரைக் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கூலி தொழிலாளர்கள், டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என பல லட்சம் பேருக்கு வேலை இல்லை. இதன் மூலம் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பால் வண்டி, தண்ணீர் வண்டி, காய்கறி உள்ளிட்ட முக்கியமான அத்தியாவசிய வண்டிகள் மட்டும் தான் இயங்கி கொண்டிருக்கிறது.பெட்ரோலியம் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் இன்றைக்கும் ஓடுகிறது. இந்த சங்கத்தின் நிர்வாகிகள் வருகிற திங்கட்கிழமைக்கு மேலே ஸ்டிரைக் ஆதரவு குறித்த முடிவை சொல்கிறோம் என்றனர்.

    வேலை இழப்பினால் நாடு முழுவதும் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 கோடி பேர் நேரிடையாக பாதிக்கப்படுவார்கள்.

    தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு ரூ. 300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பதால் ரூ. 600 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் லாரிகள் தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு போகும். வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய சரக்குகள் எல்லாம் முழுவதுமாக தமிழகத்திற்கு வரவில்லை. பருப்பு வகைகள், சீரகம், பூண்டு, ஆப்பிள் பழ வகைகள் எதுவும் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் 4500 லாரிகள் நேற்று முதல் ஓட வில்லை. மாதவரம் லாரி நிறுத்துமிடத்தில் அனைத்து லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு தினமும் 500 லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படும்.

    2-வது நாளாக இன்று லாரி ‘ஸ்டிரைக்’ நீடித்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படவில்லை. மினி லாரிகள் மூலமாக மட்டுமே இன்று காய்கறிகள் கோயம்பேடுக்கு வந்தன. இதனால் காய்கறி வரத்து பெருமளவு குறைந்துள்ளது.

    வரத்து குறைவு காரண மாக காய்கறி, பழங்கள் விலை உயரும் அபாயத்தில் உள்ளது. தொடர்ந்து ஸ்டிரைக் நீடிக்குமானால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் என்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகி சந்திரன் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் தேவையான காய்கறிகள் தற்போது ஓரளவு கை இருப்பு உள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் லாரி ஸ்டிரைக் தொடர்ந்தால் காய்கறி விலை கடுமையாக உயரும்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறி விலை விபரம் வருமாறு:-

    கத்தரிக்காய் - ரூ.10
    தக்காளி - ரூ.10
    முருங்கைக்காய் - ரூ.20
    பீன்ஸ் - ரூ.40
    பாகற்காய் - ரூ.20
    கேரட் - ரூ.35
    பல்லாரி வெங்காயம் -ரு.20
    அவரைக்காய் - ரூ.30
    மிளகாய் - ரூ.40  #LorryStrike
    Next Story
    ×