search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணத்துக்கடவு அருகே அரசு பஸ் மோதி பெண் பலி
    X

    கிணத்துக்கடவு அருகே அரசு பஸ் மோதி பெண் பலி

    கிணத்துக்கடவு அருகே இன்று காலை மொபட் மீது அரசு பஸ் மோதி பெண் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    கிணத்துக்கடவு:

    கோவை சுண்டக்கா முத்தூரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (55) கட்டிட தொழிலாளி. கோவை குளத்துப்பாளையத்தை சேர்ந்த ருக்மணி (40). சித்தாள். இவர்கள் இருவரும் இன்று காலை கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையத்தில் கட்டிட வேலைக்கு மொபட்டில் சென்றனர். கோவை-பொள்ளாச்சி சாலையில் ஏழூர் பிரிவு பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது கோவையில் இருந்து பழனிக்கு அரசு பஸ் வந்தது. இந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியது. இதில் ருக்மணி பஸ் சக்கரத்தில் சிக்கினார். அவர் மீது சக்கரம் ஏறி இறங்கியது. அவர் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    வெங்கடாசலம் படுகாயம் அடைந்தார். மொபட் மீது மோதிய பின்னரும் கட்டுக்குள் வராத பஸ் அந்த வழியாக மற்றொரு மொபட்டில் சென்ற செட்டிப்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த ரவிக்குமார் (40), போத்தனூர் மாந்தோப்பு ரெயில்வே காலனி நாகராஜன் (46) ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். இவர்களும் கட்டிட தொழிலாளர்கள் ஆவார்கள். வேலைக்கு சென்ற போது விபத்தில் சிக்கி கொண்டனர்.

    இது குறித்து கிணத்துக் கடவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த வெங்கடாசலம், ரவிக்குமார், நாகராஜன் ஆகியோரை மீட்டுசிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான ருக்மணி உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

    கிணத்துக்கடவு ஏழூர் பிரிவு பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இப் பகுதியில் தொடர் விபத்து நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் பீதியில் உள்ளனர். எனவே விபத்தை தடுக்க அப் பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×