search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைதான் நேர்மையாக இருக்கும் - தலைமை நீதிபதி கருத்து
    X

    துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைதான் நேர்மையாக இருக்கும் - தலைமை நீதிபதி கருத்து

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைதான் நேர்மையாக இருக்கும் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி கூறியதாவது:-

    தூத்துக்குடி சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே ஒரு தனிப்பட்ட அமைப்பு விசாரித்தால்தான் விசாரணை நேர்மையாக நடைபெறும்.

    இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? குட்கா விவகாரத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு இருந்ததால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்தேன். இதில் போலீசார், அரசியல்வாதிகள் என யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று கூறினார்.

    இந்த வழக்கு தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் வருகிற ஜூலை 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்காத பலியானவர்களின் உறவினர்கள் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியை அணுகி பெற்று கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring

    Next Story
    ×